மைக்ரோசாஃப்ட், ஜோஹோ போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் தற்போது சம்பள உயர்வு ரத்து, பணி நீக்கம், விருப்ப வெளியேற்றம் போன்ற பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது அதன் ஊழியர்களை நேரடியாகப் பாதிக்கும். செயற்கை நுண்ணறிவு பிரிவில் அதிக அளவில் முதலீடு செய்யும் அதேவேளையில், செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக தனது மொத்த ஊழியர்களில் சுமார் கால் பகுதியினரான சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப பணிவிலகல் (Voluntary Buyout) சலுகையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சில குழுக்களுக்கு விலக்கு!
அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களில், துணைத் தலைவர் நிலை மற்றும் அதற்கு கீழ் உள்ள ஊழியர்கள் இதற்குத் தகுதியானவர்கள் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், டேட்டா சென்டர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் பணிபுரியும் சில குழுக்கள் இதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
நிறுவனம் கூறிய காரணம்!
“இந்த விருப்ப பணிவிலகல் சலுகையானது, மாற்றத்தை நோக்கி எங்களது அணுகுமுறையை மாற்றுவதில் ஒரு முக்கிய பகுதியாகும். இது அதிகப்படியான நெகிழ்வுத்தன்மையையும், முடிந்தவரை ஊழியர்கள் தங்களின் அடுத்த கட்ட வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ள பல வழிகளையும் உருவாக்குகிறது” என்று அந்நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் நிர்வாக துணைத் தலைவர் ஏமி கோல்மேன் ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக பணிவிலகல் சலுகை!
இந்த ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கும் இரண்டாவது விருப்ப பணிவிலகல் சலுகை இதுவாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள தனது பணியாளர்களில் சுமார் 7 சதவீதத்தினருக்கு முன்கூட்டியே ஓய்வு பெறும் விருப்பத்தை நிறுவனம் வழங்கியிருந்தது. தகுதியானவர்களில் சுமார் 30 சதவீதத்தினர் அந்த விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் 228,000 ஆக இருந்த உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கை, ஜூன் மாத இறுதியில் 2,23,000 ஆகக் குறைந்துள்ளது.
சம்பள உயர்வை நிறுத்திய ஜோஹோ!
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய பணிவிலகல் சலுகைக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 27 சதவீதத்தினர் தகுதியுடையவர்கள் ஆவர். மறுபுறம், இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனம் ஒன்று சம்பள உயர்வை ரத்து செய்திருந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக அதிகரிக்கும் செலவுகள் மற்றும் தரவு மையங்களுக்கான சர்வர் விலைகள் நான்கு மடங்காக உயர்ந்திருப்பதால், இந்த ஆண்டு தங்களது ஊழியர்களுக்கு வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படாது என்று ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவித்திருந்தார்.
ஆட்குறைப்பை கட்டுப்படுத்த முயற்சி!
சந்தை மந்தநிலை காரணமாக மார்க்கெட்டிங் செலவுகளும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சாஃப்ட்வேர் துறை வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் சற்று சவாலாக இருந்தாலும் நிறுவனத்தில் பெரிய அளவிலான ஆள்குறைப்பு நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக தாங்கள் தீவிரமாக உழைத்து வருவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். மென்பொருள் துறைச் சூழல் காரணமாக கடந்த 18 மாதங்களாக ஜோஹோ நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல் அப்படியே பராமரித்து வருகிறது.
வளர்ச்சிக்கான நடவடிக்கை!
கடினமான இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நிறுவனத்துடன் இணைந்து பயணிக்கும் ஊழியர்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்தச் சவாலான பொருளாதாரச் சூழலைச் சமாளித்து நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பணியில் ஜோஹோ நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தை AI தொழில்நுட்பம் மற்றும் டேட்டா சென்டர்களை மேம்படுத்துவதில் தீவிரமாகச் செலுத்தி வருவதால், பாரம்பரிய ஐடி மற்றும் சப்போர்ட் பணிகளில் ஆள்குறைப்பு நடந்து வருகிறது.
செலவுக் கட்டுப்பாடு மற்றும் லாபம்!
ஐடி நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரிக்கவும், தேவையற்ற நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆரக்கிள், டெல் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், AI கட்டமைப்புகளில் முதலீடு செய்யவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களைத் தொடர்ந்து வேலையை விட்டு நீக்கி வருகின்றன. குறிப்பாக அமேசான் நிறுவனம் பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இந்திய மையங்களிலும் தனது கார்ப்பரேட் பணியிடங்களைக் குறைத்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்!
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள், நடுத்தர மற்றும் மூத்த நிலை பணியாளர்களை மறுசீரமைப்பு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும், சில நிறுவனங்களில் செயல்திறன் அடிப்படையிலான மாறக்கூடிய ஊதியம் (Variable Pay Cuts) மற்றும் ஊதிய உயர்வுகளை நிறுத்திவைப்பது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளிப்கார்ட், லிவ்ஸ்பேஸ் போன்ற இந்திய நிறுவனங்களும் சந்தை நிலவரத்திற்கேற்ப தங்களது பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன.
பணியாளர்களின் எதிர்காலம்!
ஐடி நிறுவனங்கள் வெறும் ஆள்குறைப்புடன் நின்றுவிடாமல், ஊழியர்களைப் புதிய AI மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்களில் தங்களை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன. நிரந்தர வேலைவாய்ப்புகளுக்குப் பதிலாகத் திட்ட அடிப்படையிலான மற்றும் கிக் தொழிலாளர் முறையை நிறுவனங்கள் அதிகம் நாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Source link
