டீசல், உதிரி பாகங்கள் வாங்க நிதியின்றி அவதி: வெற்றிப் பயண நிதியை உடனே வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னை,

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க வசதியாக, ஒவ்வொரு மாதமும் வெற்றிப் பயண திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொகையை அரசு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மகளிர் இலவசப் பயணத் திட்டத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடு செய்வதற்கான நிதியை அரசு இதுவரை வழங்காததால் டீசல், உதிரிபாகங்கள் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்குக் கூட நிதியில்லாமல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திணறி வருகின்றன.

தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட வகை பேருந்துகளில் மட்டும் விடியல் பயணம் என்ற பெயரில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்டு வந்தது. த.வெ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், அதன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைவு மற்றும் சொகுசுப் பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் பயணம் செய்வதற்கான வெற்றிப் பயணத் திட்டம் நடப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அன்றாட வருவாய் பாதிக்கும் கீழாகக் குறைந்து விட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மகளிர் விடியல் பயணம், மாணவர்களுக்கான இலவசப் பயணச் சலுகை ஆகியவற்றுக்காக அரசின் சார்பில் வழங்கப்படும் மானியத் தொகையையும் சேர்த்து தினமும் ரூ.47 கோடி வருவாய் கிடைத்து வந்தது. அரசின் மானியங்கள் இல்லாமல் இயக்க வருவாயாக மட்டும் தினமும் சராசரியாக ரூ.21 கோடி கிடைத்து வந்தது. இப்போது தினசரி இயக்க வருவாய் சராசரியாக ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடியாக குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. வெற்றிப் பயணம் தவிர பிற திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியங்களையும் சேர்த்தால் கூட, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தினசரி வருவாய் ரூ. 47 கோடியிலிருந்து ரூ.22 கோடியாக குறைந்து விட்டதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழங்களின் சார்பில் தினமும் 19,283 பேருந்துகள் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. அவற்றில் 7,714 நகரப் பேருந்துகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த விடியல் பயணத்தின் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்ட இழப்பு கணக்கிடப்பட்டு கடந்த ஆண்டில் ரூ.3,599 கோடி வழங்கப்பட்டது; நடப்பாண்டில் இந்தத் தொகை ரூ.3,999 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்போது விடியல் பயணம் விரிவுபடுத்தப்பட்டும், வெற்றிப் பயணமாக்கப்பட்ட பிறகு 12,695 பேருந்துகளில் தினமும் 84.32 லட்சம் பெண்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், விடியல் பயணத்தின் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதைத் தான் போக்குவரத்துக் கழகங்களால் சமாளிக்க முடியவில்லை.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒவ்வொரு நாளும் டீசல் வாங்குவதற்காக ரூ.16.17 கோடி, பிற பராமரிப்புச் செலவுகளுக்கு ரூ.2.35 கோடி என மொத்தம் ரூ.18.52 கோடி செலவாகிறது. ஆனால், பேருந்து இயக்கத்தின் மூலம் தினமும் சுமார் ரூ.8 கோடி மட்டுமே கிடைக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் டீசல் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளை எவ்வாறு சமாளிக்க முடியும்?

வெற்றிப் பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மட்டும், டீசல் வாங்கியதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.150 கோடி வழங்க வேண்டியுள்ளது. ரொக்கமாகக் கொடுத்து டீசல் வாங்கும்போது 2% தள்ளுபடி கிடைக்கும் என்றும், கடந்த 25 நாள்களில் மட்டும் ரூ.150 கோடி கடனுக்கு டீசல் வாங்கப்பட்டிருப்பதால் ரூ. 3 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. மேலும் டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் வாங்குவதற்கு பணம் இல்லாததால், ரீ & த்ரெட் செய்யப்பட்ட டயர்களையும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட உதிரிபாகங்களையும் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கி விடக் கூடும்.

விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, ஒவ்வொரு நாளும் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. அந்தத் தொகை 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசால் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அன்றாட செலவுகளுக்குத் தேவையானதை விட அதிக தொகை பேருந்து இயக்கத்தின் மூலம் கிடைத்து வந்ததால் நிலையை சமாளிக்க முடிந்தது. ஆனால், இப்போது அன்றாடச் செலவுகளுக்குத் தேவையான வருவாய் கூட பேருந்து இயக்கம் மூலம் கிடைப்பதில்லை என்பதுதான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடையக் காரணம். வெற்றிப் பயணத் திட்டத்திற்கான நிதியை அரசு வழங்கினால் மட்டுமே நிலைமை சமாளிக்க முடியும்.

ஆனால், அதற்கான எந்த முன்னெடுப்பும் அரசுத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டத்திற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது கூட இதுவரை அறிவிக்கப்படவில்லை. விடியல் பயணத் திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.3,999 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், வெற்றிப் பயணம் என மாற்றப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.5,000 கோடி முதல் ரூ.6,000 கோடி வரை சேர்த்து மொத்தம் ரூ.9,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை ஒதுக்கப்பட வேண்டும் என்பது தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எதிர்பார்ப்புகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க வசதியாக, ஒவ்வொரு மாதமும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொகையை அரசு முன்கூட்டியே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link