இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனல் அரசாங்கம் எப்படி அமையும்?

பிரசுரிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டதில் இருந்து அந்நாட்டில் கூட்டணி அரசுகளே அமைந்து வந்துள்ளன. ஆனால், அடுத்த அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடம் பெறுவாரா?

ஹமாஸ் தலைமையிலான தாக்குதல், 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடந்த பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தலுக்காக, அக்டோபர் 27ஆம் தேதி இஸ்ரேல் வாக்களித்தது.

வாக்குப் பதிவு நாள் நெருங்கியபோது, சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் கடுமையான போட்டிகளில் ஒன்றாக இது இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இரு தரப்புக்கும் உடனடியாகத் தெளிவான வெற்றி கிடைக்காது என்று பெரும்பாலான தேர்தல் பார்வையாளர்கள் கணித்தனர்.

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் இதை உறுதி செய்வதாகத் தெரிந்தன. அவற்றின்படி, தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்க்கும் காடி ஐசன்கோட்டின் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றக்கூடும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக நெதன்யாகுவின் லிகுட் கட்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்படியானால், அடுத்து என்ன நடக்கும்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது மனைவி சாராவும் ஜெருசலேமில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கத் தயாராகின்றனர். அவர்கள் நீலநிற வாக்குப்பெட்டிக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

படக்குறிப்பு, பிரதமர் நெதன்யாகு கடந்த மூன்று தசாப்தங்களில் பெரும்பாலான காலம் இஸ்ரேலை ஆண்டு வருகிறார்.

இஸ்ரேலின் தேர்தல் முறை எவ்வாறு செயல்படுகிறது?

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 120 இடங்கள் உள்ளன. எனவே, ஓர் அரசாங்கத்தை அமைத்து பெரும்பான்மையை உறுதிசெய்ய 61 இடங்களைக் கொண்ட கூட்டணி தேவை.

இஸ்ரேலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை நடைமுறையில் இருப்பதால், பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணிகள் மூலமாகவே அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளன.

பெஞ்சமின் நெதன்யாகுவால் அரசாங்கம் அமைக்க முடியுமா?

அக்டோபர் 23ஆம் தேதி வெளியான சமீபத்திய கருத்துக் கணிப்புகள், நெதன்யாகுவின் கட்சிக் கூட்டணியோ அல்லது அவரது முக்கியப் போட்டியாளரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான ஜெனரல் காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணியோ 61 இடங்கள் என்ற பெரும்பான்மை இலக்கை எட்டாது என்று தெரிவித்தன.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது, தற்போது அதிபராக இருக்கும் ஐசக் ஹெர்சாக், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார். பின்னர், ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தாம் கருதும் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பார்.

பொதுவாக, நெசெட் எனப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியின் தலைவரை அரசாங்கம் அமைக்க அதிபர் அழைப்பார். இருப்பினும், இது கட்டாயமான நடைமுறை அல்ல.

உதாரணமாக, 2009 தேர்தல்களுக்குப் பிறகு, எதிரணியான கடிமா கட்சியைவிட லிகுட் கட்சி குறைவான இடங்களைக் கொண்டிருந்தபோதிலும், அப்போதைய அதிபர் ஷிமோன் பெரஸ் முதலில் நெதன்யாகுவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

அதிபரின் முதல் தேர்வாக உள்ள தலைவருக்கு அரசாங்கத்தை அமைக்க அதிகபட்சமாக 42 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அந்தக் காலக்கெடுவுக்குள் அவர் ஆட்சி அமைக்கத் தவறினால், மற்றொரு கட்சியின் தலைவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், சிறுபான்மை அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதுவும் தோல்வியடைந்தால், புதிய தேர்தல் நடத்தப்படலாம். அதுவரை நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகத் தொடர்வார்.

பெஞ்சமின் நெதன்யாகு (இடதுபுறம்) மற்றும் ஜெனரல் ஐசென்கோட்

படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(இடது) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெனரல் ஐசென்கோட் (வலது)

எந்த அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன?

நெதன்யாகுவின் லிகுட் கட்சியும், ஐசன்கோட்டின் யாஷார் கட்சியும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சிகளாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு மற்ற கட்சிகளின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படும். வலதுசாரி மற்றும் மதக் கட்சிகளின் கூட்டணிக்கு நெதன்யாகு தலைமை தாங்குகிறார்.

கடந்த 1996ஆம் ஆண்டு அவர் முதன்முதலில் ஆட்சிக்கு வந்தார். யிட்சாக் ராபின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற முன்கூட்டிய தேர்தலுக்குப் பிறகு, இஸ்ரேலில் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் பிரதமரானார்.

கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும்பாலான காலகட்டங்களில் அவர் அதிகாரத்தில் நீடித்துள்ளார். ஐசன்கோட், மிதவாத வலதுசாரி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறார். இந்தக் கட்சிகளின் முக்கியமான, பொதுவான நோக்கம், நெதன்யாகுவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதாகும்.

முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் தலைமையிலான ‘பி’யாக்த்’ (B’Yakhd) கட்சியும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அரேபியர்கள் இஸ்ரேலின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காக இருப்பதால், இரண்டு அரபுக் கட்சிக் கூட்டணிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

கோட்பாட்டளவில், அரசாங்கத்தை அமைப்பதில் இந்தக் கட்சிகள் தீர்மானிக்கும் பங்கை வகிக்க முடியும். இருப்பினும், முக்கிய யூதக் கட்சிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும், அரசாங்கத்தில் இந்தக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய முன்னாள் ராணுவத் தளபதியும் யஷார் கட்சியின் தலைவருமான காடி ஐசென்கோட்

படக்குறிப்பு, இஸ்ரேலிய முன்னாள் ராணுவத் தளபதியும் யஷார் கட்சியின் தலைவருமான காடி ஐசென்கோட், ஹெர்சிலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தனது வாக்கைச் செலுத்துகிறார்.

தேர்தல் முடிவுகள் எப்போது தெரிய வரும்?

அக்டோபர் 28ஆம் தேதி முதல் முதல்கட்ட முடிவுகள் வெளியாகத் தொடங்கும். அதிகாரபூர்வ முடிவுகள் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும்.

கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல வாரங்கள், சில நேரங்களில் பல மாதங்கள்கூட நீடிக்கலாம்.

கடந்த 2021 மார்ச் மாதத் தேர்தல்களுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில்தான் அரசாங்கம் அமைக்கப்பட்டது. அப்போது நஃப்தாலி பென்னட்டுக்கும் யாயிர் லாபிட்டுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது.

அந்த நேரத்தில், அரசாங்கத்தை அமைப்பதற்கான முதல் வாய்ப்பு நெதன்யாகுவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அரசாங்கத்தை நடத்தக் கூடிய கூட்டணியை அவரால் அமைக்க முடியவில்லை.

இஸ்ரேலில் புதிய தேர்தல்கள் நடைபெறுவது வழக்கத்திற்கு மாறானதல்ல. 2019 முதல் 2022 வரை, அரசியல் கட்சிகளால் கூட்டாகச் செயல்படுவது குறித்து உடன்பாடு எட்ட முடியாததால், ஐந்து தனித்தனி தேர்தல்கள் நடைபெற்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link