செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போன வழக்கில் சிறுமியின் தாயார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சாமியார், ச சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சிபிசிஐடியின் வழக்கு விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மர்மமான முறையில் மாயமான சிறுமி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த அக். 12-ம் தேதி அதிகாலையில் வீட்டில் பெற்றோருக்கு நடுவே தூங்கிக்கொண்டிருந்தபோது மர்மமான முறையில் மாயமானார். இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், எவ்விதத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி விசாரணை தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், குழந்தையைத் தேடும் பணி 17-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை
விசாரணையை விரைவுபடுத்தும் நோக்கில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டுஉள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி காவலர்கள் வரவழைக்கப்பட்டு, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் சிபிசிஐடி டி.எஸ்.பி வேல்முருகன், ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் முகாமிட்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
தீவிர தொழில்நுட்ப விசாரணை
செல்போன் டவர்கள்: ஆலம்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 3 செல்போன் கோபுரங்களின் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு, அப்பகுதியில் பதிவான சுமார் 600 எண்களின் இருப்பிடத் தகவல்கள் (Tower Location Data) சேகரிக்கப்பட்டு விரிவான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள்: செஞ்சி வழியாகச் செல்லும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் ஆய்வு: விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், கேண்டீன்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்சந்தேக நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் 5 மணி நேர விசாரணை
பரதன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த, 13 குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான (History-sheeter) ராஜதுரை என்பவரைப் பிடித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
சிறுமி காணாமல் போன நாளன்று அவரது நடமாட்டம் சுடுகாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்ததாகக் கூறப்பட்டதால், அவரை நேரில் அழைத்துச் சென்றும் ஆய்வு செய்தனர்.
எனினும், சிறுமி காணாமல் போனதற்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
பள்ளியில் நேரில் ஆய்வு
இதற்கிடையே, மாயமான சிறுமி பயின்று வந்த ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு டி.எஸ்.பி வேல்முருகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கிருந்த சிபிசிஐடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சாட்சியங்களை விசாரித்து வருகிறார்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சிறுமி குறித்த உறுதியான தகவல் தெரியவரும் எனத் தெரிவித்தனர்.
தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் சிறுமி மாயமாகி 17 நாட்கள் ஆகியும் துப்பு கிடைக்காதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
