கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க, சட்டமன்றத்தில் ஒரு கட்சியின் 3ல் 2 பங்கு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அவசியமாகிறது. தற்போதைய சூழலில், அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி தலைமைப் பொறுப்பு மற்றும் கட்சியின் எதிர்கால வியூகங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு வலியுறுத்தி வருகிறது.
கடந்த மே மாதம் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இடையே பிளவு ஏற்பட்டது. வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் ஒரு முடிவையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ-க்கள் அதற்கு எதிராகவும் செயல்பட்டனர்.
எஸ்.பி.வேலுமணியின் தற்போதைய கோரிக்கை
தங்களுக்குள் இருப்பது உள்கட்சி கருத்து வேறுபாடு மட்டுமே தவிர, கட்சியை உடைக்கும் எண்ணம் இல்லை என்று வேலுமணி தொடர்ந்து கூறி வருகிறார். எனினும் டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என இபிஎஸ்-க்கு வேலுமணி தரப்பு அழுத்தம் கொடுத்து வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில் அந்த முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஒருவேளை மீண்டும் சட்டமன்றத்தில் ஏதேனும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால், தங்களுக்கு இருக்கும் 3ல் 2 பங்கு எம்.எல்.ஏ-க்களின் பலத்தைக் காட்டி, எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை முடிவுகளுக்கு சவால் விடவும், தங்களின் கோரிக்கைகளை ஏற்க வைக்கவும் வேலுமணி முகாம் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
திமுகவின் சைலன்ட் ஆபரேஷன்
நவம்பர் 13ம் தேதிக்குப் பிறகு, தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீண்டும் கொண்டுவர முடியும். அப்போது, ஆளும் தரப்பு எம்.எல்.ஏக்களை ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வைக்கும் ஆபரேஷன் சைலன்ட்டாக நடப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அந்த முயற்சியில் திமுக இறங்கியிருக்கும் நிலையில், மூன்றில் இரு பங்கு அதிமுக எம்.எல்.ஏக்களை தவெகவுக்கு ஆதரவாகத் திருப்ப வேண்டுமென வேலுமணி டீம் களமிறங்கியிருப்பதாக பேசப்படுகிறது.
செல்வாக்கை நிரூபிக்க எஸ்.பி.வேலுமணி முயற்சி
கொங்கு மண்டலத்தில் மீண்டும் தனது செல்வாக்கை நிலைநிறுத்த எஸ்.பி.வேலுமணி டீம்முயன்றுவருவதாகவும், 3ல் ஒரு பங்கு அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயாது என்றும் தவெக அரசு அறுதிப்பெரும்பான்மையுடன் ஐந்து ஆண்டுகளும் ஆட்சி நடத்த முடியும் என்று கூறி காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.பி.வேலுமணி டீம் முயற்சி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் சமயம் தமிழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தற்போது கருத்து கூறும் நிலையில் இல்லை, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார். தமிழ்நாட்டு அரசியலில் நிகழும் அடுத்தடுத்த மாற்றங்கள் குறித்து சமயம் தமிழுடன் இணைந்திருங்கள்.
