பாட்னா,
பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த லாரி, ஆட்டோ மீது மோதிய விபத்தில் பெண் மற்றும் 8 மாதக் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர்.
ஆட்டோவை வெட்டி மீட்பு
சரண் மாவட்டம், கர்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹாட்பூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை 722-ல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்தது. லாரி மோதிய வேகத்தில் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்ததால், அதில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் கேஸ் கட்டர் மூலம் ஆட்டோவின் உலோகப் பகுதிகளை வெட்டினர்.
தகவலறிந்து வந்த கர்கா போலீசாரும், 112 அவசரகால மீட்புக் குழுவினரும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆஷிஷ் குமார் என்ற ஜீத்து (25), அமன் குமார் (20) ஆகிய உறவினர்களும் அடங்குவர். உயிரிழந்த பெண்ணும் குழந்தையும் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
பஞ்சாப்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, அவர்களது ஆட்டோ மீது அதிவேகத்தில் லாரி மோதியதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
லாரி ஓட்டுநருக்குப் போலீசார் வலை
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சாப்ரா சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய லாரி ஓட்டுநரைத் தேடி வரும் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
