இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

கன்னியாகுமரி,

கடந்த 2022-ம் ஆண்டு, ஜூன் 7-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியை சேர்ந்த திரேசம்மாள் (வயது 90), பௌலின்மேரி(48) ஆகிய 2 பேரும் அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். பௌலின்மேரியின் தங்கை பலமுறை போன் செய்தும் அவர் எடுக்காததால், நேரில் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோதுதான் இந்த இரட்டைக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தக் கொலை தொடர்பாக வெள்ளிச்சந்தை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடியப்பட்டணம் பாத்திமா தெருவைச் சேர்ந்த அமலசுதன்(39) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை, திருட்டு மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் முறையாகச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் அமலசுதன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து கண்காணித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகிறார். இந்த வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு செய்து தண்டனை பெற்றுத் தந்த குளச்சல் உட்கோட்ட ஏ.எஸ்.பி., வெள்ளிச்சந்தை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், அரசு குற்ற வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

Source link