ஐதராபாத்,
“மண்டமேல இருக்க கொண்டய பாக்கல போல…” என்ற வடிவேலுவின் காமெடி பாணியில், ஐதராபாத்தின் அக்பர் பாக் பகுதியில் பட்டப்பகலில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஸ்டெப்னி டயரை வாலிபர் ஒருவர் துணிகரமாகத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகலில் நடந்த துணிகரம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலாக்பேட்டைக்கு உட்பட்ட அக்பர் பாக் குடியிருப்பு பகுதியில் உள்ள தெரு ஒன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருப்பு நிற மஹிந்திரா தார் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சுற்றிலும் ஆட்கள் நடமாட்டம் இருந்தபோதிலும் எதற்கும் பயப்படாமல் காரின் பின்புறம் சென்றார். காரின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த ஸ்டெப்னி டயரை மிக லாவகமாகக் கழற்றி, தனது ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு தப்பியோடினார்.
வசமாக சிக்கிய திருடன்
திருடன் தனது கைவரிசையைக் காட்டும் போது, அங்கிருந்த சிசிடிவி கேமராவை கவனிக்கத் தவறிவிட்டார். இதனால் அவர் டயரைக் கழற்றுவது முதல் ஸ்கூட்டரில் வைத்து எடுத்துச் செல்வது வரையிலான அனைத்துக் காட்சிகளும் கேமராவில் தெளிவாக பதிவாகின. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
போலீஸ் விசாரணை
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சாதிர்நாட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் டயரைத் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தொடரும் தார் கார் டயர் திருட்டுகள்
ஐதராபாத்தின் பழைய நகரப் பகுதிகளில் அண்மைக்காலமாக மஹிந்திரா தார் போன்ற எஸ்யூவி வாகனங்களின் வெளிப்புற டயர்களை மட்டுமே குறிவைத்து ஒரு கும்பல் திருடி வந்துள்ளது. அக்பர் பாகிற்கு முன்பாக சந்திராயங்குட்டா பகுதியிலும் இதேபோன்று தார் காரின் ஸ்டெப்னி டயர் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் குடியிருப்புப் பகுதிகளிலேயே நடைபெறும் இந்த தொடர் திருட்டுகள் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
