சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மின்னணுக் கழிவுகளை (E-Waste) வீடுகள்தோறும் சென்று சேகரிக்கும் சிறப்பு முகாம் 31.10.2026 அன்று நடைபெறவுள்ளது.
சிறப்பு முகாம்
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய அரசால், மின்னணுக் கழிவுகளைத் திறம்படச் சேகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் முறையாக அகற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கும், இது தொடர்பான நடவடிக்கைகளை உரிய முறையில் ஒருங்கிணைப்பதற்கும், சிறப்பு இயக்கம் 6.0 (Special Campaign 6.0) என்ற முன்னெடுப்பினை அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் 31.10.2026 அன்று வீடுகள் தோறும் சென்று மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு
பொதுமக்கள் தங்களிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள அல்லது பழுதடைந்த மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகளான பழைய கைபேசிகள், மின்னேற்றிகள் (Chargers), கணினிகள், மடிக்கணினிகள், விசைப்பலகைகள், மின்கம்பிகள் மற்றும் இதர மின்னணுச் சாதனங்களை 31.10.2026 அன்று நடைபெற இருக்கும் சிறப்பு சேகரிப்பு பணியின் போது ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னணுக் கழிவுகளை வீட்டுக் குப்பைகளுடன் கலக்காமல் தனியாகச் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றைப் பொது இடங்களிலோ, சாலையோரங்களிலோ அல்லது நீர்நிலைகளிலோ வீசுவதைத் தவிர்க்க வேண்டும். மின்னணுக் கழிவுகளை முறையற்ற வகையில் அகற்றுவது சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், பொதுமக்களின் உடல்நலத்திற்குப் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
இந்த சிறப்பு சேகரிக்கும் பணியின் போது சேகரிக்கப்படும் மின்னணுக் கழிவுகளை, உரிய விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவு மறுசுழற்சி நிறுவனங்கள் மூலம் முறையாகச் செயலாக்கப்படும்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியின் இம்முயற்சிக்கு பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் (RWAs), கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளித்து, மின்னணுக் கழிவுகளை முறையாக ஒப்படைத்து, தூய்மையான மற்றும் பசுமையான சென்னையை உருவாக்கப் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
