தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் :
தீபாவளிப் பண்டிகை என்பது வீட்டில் மட்டுமின்றி வாழ்வில் இருக்கும் இருளை போக்கி, மகிழ்ச்சி என்னும் ஒளியை கொண்டு வரும் பண்டிகையாகும். தீமையை நன்மை வெற்றி கொண்ட நாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை புராணங்களுடன் தொடர்புடைய நாளாகவும், ஆன்மீகத்தில் லட்சுமி தேவியின் அருளை பெறுவதற்கரிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 08ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிப் பண்டிகை, நம்முடைய வாழ்வில் இருக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் விலகி, செல்வ செழிப்பு வருடம் முழுவதும் நிலைத்து இருப்பதற்கு லட்சுமி தேவி மற்றும் குபேரரை வழிபடுவதற்குரிய நாளாக கருதப்படுகிறது. அதனால் இந்த நாளில் சிலவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும், சிலவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளை பெறுவதற்கு தீபாவளி திருநாள் அன்று என்னென்ன செயல்களை செய்ய வேண்டும், எந்தெந்த காரியங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
வெறும் இனிப்புக்களை பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுவது மட்டும் தீபாவளிப் பண்டிகை கிடையாது. இந்த பண்டிகையை முறையாக எப்படி கொண்டாடுவது என்பதை தெரிந்து கொண்டு, பாரம்பரிய முறையில் கொண்டாடுவதால் இதன் முழு பலனையும் நம்மால் அடைய முடியும்.
தீபாவளி அன்று செய்ய வேண்டியவை :
1. தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அதுவும் தலையில் நல்லெண்ணெய் மற்றும் சீயக்காய் வைத்து குளிக்க வேண்டும்.
2. தீபாவளி அன்று கண்டிப்பாக புதிய ஆடை அணிய வேண்டும். புது ஆடை அணியாமல் இருக்கக் கூடாது.
3. கண்டிப்பாக தீபாவளி அன்று அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
4. தீபாவளி அன்று தேவையில்லாத சண்டை, சச்சரவுகளை குறைத்து, மகிழ்ச்சியாக அனைவருடனும் ஒற்றுமை மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
5. தீபாவளி அன்று உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.
6. தீபாவளி அன்று வீட்டில் கண்டிப்பாக லட்சுமி குபேரர் பூஜை செய்ய வேண்டும். இது வருடம் முழுவதும் வீட்டில் செல்வ செழிப்பை கொடுக்கும் என்பது நம்பிக்கை.
தீபாவளி அன்று கண்டிப்பாக செய்யக் கூடாதவை :
1. தீபாவளி என்பது தீபங்களின் திருநாள் ஆகும். அதனால் இந்த நாளில் வீட்டை இருளாக வைத்திருக்கக் கூடாது.
2. தீபாவளி அன்று மற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கும் போது தோல் பெல்ட், லெதர் பேக் போன்ற தோலால் செய்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.
3. தீபாவளி, மகாலட்சுமி தேவி அனைத்து வீடுகளிலும் எழுந்தருளும் நாள் என்பதால் லட்சுமி பூஜை செய்த பிறகும், காலை மற்றும் மாலையிலும் விளக்கி ஏற்றாமல் இருக்கக் கூடாது.
4. இது மங்களங்கள் மற்றும் மகிழ்ச்சியை தரும் நாள் என்பதால் பெரியவர்கள் மற்றும் உதவி கேட்போரை மனம் வேதனைப்படும் வகையில் பேசக் கூடாது.
5. இந்த நாளில் பெண்கள் அழுக்கு ஆடைகளுடன், சுத்தமின்றி இருப்பதும் அழுவதும் செய்யக் கூடாது. இது மங்களமற்ற சூழலை ஏற்படுத்தும்.
