இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸுடன் வாக்குவாதம்… ஹாரிஸ் ரவுப்பிற்கு அபராதம் – ஐசிசி நடவடிக்கை

லாகூர்,

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடத்தை விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப்பிற்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வில் ஜாக்ஸுடன் வாக்குவாதம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் இன்னிங்ஸின் 46-வது ஓவர் முடிவில் இந்த சம்பவம் நடந்தது.

அப்போது ஸ்ட்ரைக்கர் அல்லாத முனையில் இருந்த ஹாரிஸ் ரவுப், வைடு பந்து வழங்க கோரி முறையிட்டார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கள நடுவர் ஷர்புத்துல்லா இப்னே ஷாஹித் எச்சரித்தபோதும், ரவுப் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததுடன் தனது பேட்டையும் உயர்த்திக் காட்டினார். இதன் காரணமாக ஹாரிஸ் ரவூப்பிற்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கும் அபராதம்

இதே போட்டியில், 3 ஓவர்கள் தாமதமாக பந்து வீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி நடத்தை விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இதன்படி, மூன்று ஓவர்கள் குறைவாக வீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

Source link