அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி அறிவிப்பு

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.

இந்த குகைக்கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரையாக சென்று அமர்நாத் குகைக்கோவிலில் குவிவார்கள்.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜுன் 3ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்குவதாக ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். அமர்நாத் யாத்திரை ஜுன் 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 28ம் தேதி வரை மொத்தம் 57 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 15ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஆன்லைன் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 முதல் 70 வயது வரையிலான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link