திருவள்ளுவர் ஓவியத்தில் இந்து மத அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையான நிலையில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில், திருவள்ளுவர் ஓவியத்தில் இந்து மத அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையான நிலையில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் அறிக்கை
சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி
கடந்த கால திமுக அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில், தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்
மேலும் தொடர்ந்து இந்து மத வழிபாட்டுத் தலங்களான தாய் மூகாம்பிகை கோவில், கனகதுர்க்கை கோயில் எனச் சென்று வழிபட்டு வரும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபினைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கார்த்திகைத் தீபத் திருவிழா
ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபம் ஏற்றப்படும். அவ்வகையில் 2026ஆம் ஆண்டிற்கான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம்
2025-ஆம் ஆண்டின் கார்த்திகை மாதம் நெருங்கியபோது, திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்திருக்கும் தர்காவில் இருந்து சற்றுத் தூரத்தில் உள்ள தூண் ஒன்றில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோர ஆரம்பித்தன. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு சாதகமான தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இது ஒரு புதிய வழக்கம் எனக் கூறிய இந்து சமய அறநிலையத் துறை அந்தத் தூணில் தீபம் ஏற்ற மறுத்தது. இதனால் திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் குவிந்தனர். மேலும் கடந்த ஆண்டு அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகி 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விஜய் அரசுக்கு காத்திருக்கும் பதற்றம்
இந்தச் சூழலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதனால் தீபத் திருவிழா நெருங்கும் நேரத்தில் மீண்டும் இந்த விவகாரம் வேகமெடுக்கும் எனவும், திருப்பரங்குன்றத்தில் பதற்றமான நிலை உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் தவெக அரசு எப்படி இதனைக் கையாளும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அமைச்சர் வன்னி அரசு விளக்கம்
அமைச்சர் வன்னி அரசு திருப்பரங்குன்றம் தொடர்பாக முன்னர் விளக்கமளித்துள்ளாற். அந்த பதிவில் திருப்பரங்குன்றம் தீபம் – மதவாத Fringe Elements-ஐ அரசு புறந்தள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ன சூழ்நிலை நிலவியதோ அது தொடர வேண்டும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள். இது தான் அரசின் கொள்கை. இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. எந்த மதவாத சக்தியும் உள்ளே நுழைந்து அரசியல் செய்வதற்கு நூறு சதவீதம் அனுமதிக்க மாட்டோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சருமான திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் மதுரை செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியதையும் அமைச்சர் வன்னியரசு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
