இந்திய கடற்படையின் போர் கப்பல் ஐஎன்எஸ் சயாத்ரி கொரியா சென்றடைந்தது

பூசன்,

இந்தியா – தென் கொரிய கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்பு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்தியக் கடற்படையின் அதிநவீன ஏவுகணைக் கப்பலான ‘ஐஎன்எஸ் சயாத்ரி’ கொரியாவின் பூசன் கடற்படை துறைமுகத்தை சென்றடைந்தது.

ஐஎன்எஸ் சயாத்ரி

முழுக்க முழுக்க இந்தியாவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை கப்பல், கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி பூசன் துறைமுகத்திற்குள் நுழைந்தது. அப்போது தென் கொரியா கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள், இந்திய கப்பலுக்கு அணிவகுத்து நின்று சிறப்பான மற்றும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

முக்கிய பயணம்

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யவும், இருநாட்டு கடற்படை உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இந்த முக்கிய பயணம் அமைந்துள்ளது. பூசன் துறைமுகத்தில் தங்கியிருக்கும் நாட்களில், இருநாட்டு கடற்படை வீரர்களும் பரஸ்பரம் சந்தித்து பேசுகின்றனர்.

கூட்டுப்பயிற்சி

மேலும், இருநாட்டு கப்பல்களை நேரில் பார்வையிடுதல், கூட்டு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் நட்புரீதியிலான விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றிலும் இருநாட்டு வீரர்களும் இணைந்து பங்கேற்க உள்ளனர். இந்த பயணம் இந்தியா – கொரியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link