தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 214 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், 2ஆவது போட்டியில், அபாரமாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க அணி, இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, தற்போது கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், முதல் மூன்று பேட்டர்களும் அரை சதம் அடித்து அசத்தினார்கள். ஓபனர், எய்டன் மார்க்கரம், 141 பந்தில் 78 ரன்களை அடித்த நிலையில், மற்றொரு ஓபனர் ஆக்கர்மேல் 94 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 95 ரன்களை அடித்து, சத வாய்ப்பை இழந்தார்.
அடுத்து, ஒன்டவுன் பேட்டர் டேவிட் பேடிங்கம், 80 பந்தில் 50 ரன்களை அடித்த உடனே அவுட் ஆன நிலையில், கடந்த போட்டியில் மிரட்டலாக செயல்பட்ட டெம்பா பவுமா, இப்போட்டியில் 3 பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார்.
பிறகு, இறுதிக் கட்டத்தில், ரியான் ரிகில்டன் 42 (83), மார்கோ யான்சன் 52 (71) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 329/10 ரன்களை எடுத்தது.
ஸ்டார்க் அபாரம்: ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 16.3 ஓவர்களில் 72 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். நேதன் எல்லிஸ், 23 ஓவர்களில் 71 ரன்னை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.
ஆஸ்திரேலியா, 2ஆவது இன்னிங்ஸ்: அடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணியில், இதுவரை மார்னஸ் லபுஷேன் 0 (5) மட்டுமே சொதப்பினார்.
ஓபனர்கள் மேட் ரென்ஷா 74 (139), டிராவிஸ் ஹெட் 41 (49) ஆகியோர் அதிரடி துவக்கத்தை கொடுத்த நிலையில், லபுஷேன் சொதப்பினார். பிறகு, கேமரூன் கிரீன் 110 பந்தில் 65 ரன்னை அடித்து அவுட் ஆன நிலையில், தற்போது ஜோஷ் இங்கிலிஸ் 85 (111), அலேக்ஸ் ஹேரி 51 (126) ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இவர்கள் களத்தில் இருக்கும் நிலையில், 2ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி, தற்போதுவரை 330/4 ரன்களை எடுத்து, ஒரு ரன் முன்னிலையை பெற்றுள்ளது. இங்கிலிஸ், ஹேரி இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிட்டனர். அடுத்து, கானலி, கேப்டன் கம்மின்ஸ் போன்றவர்கள் இருக்கிறார்கள். இதனால், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 100+ ரன்களை முன்னிலை பெற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
ஒருவேளை, ஆஸ்திரேலிய அணி, 100+ ரன்கள் முன்னிலையை பெற்றுவிட்டால், இப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் தோல்வி கிட்டதட்ட உறுதியாகிவிடும் எனக் கருதப்படுகிறது. ஆகையால், மூன்றாவது நாளின் முதல் இரண்டு செஷன்கள், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் செஷனாக இருக்கும் என்பதால், இது மிகமுக்கியமானதாக மாறியுள்ளது.
இப்போட்டியில், எந்த அணி வெல்கிறதோ, அந்த அணிதான் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
