பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்… 1,139 கி.மீ, 16 மணி நேரம்- கவனிக்க மறந்த 3 விஷயங்கள்! – bengaluru to mumbai vande bharat sleeper express train route travel time benefits

இந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெங்களூருவில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அதிவிரைவு ரயில் போக்குவரத்தில் சில விஷயங்களை கவனிக்க மறந்துவிட்டனர். இதன் பின்னணி குறித்து விரிவாக அலசலாம்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கடந்த 2026 ஜனவரி மாதம் பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தார். ஜனவரி 17 முதல் ஹௌரா – கமக்யா இடையில் 27575 / 27576 எண் கொண்ட ஸ்லீப்பர் ரயில் பயன்பாட்டிற்கு வந்தது.

மொத்தமுள்ள 968 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் கடக்கிறது. ஏசி 3 டயரில் ரூ.2,435, ஏசி 2 டயரில் ரூ.3,145, ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸில் ரூ.3,855 என டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் எந்த வழித்தடத்தில் வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது.

ரயில்வே வாரியம் அளித்த ஒப்புதல்

சமீபத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் பெங்களூரு மத்திய எம்.பி பி.சி.மோகனுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்த தகவலில், பெங்களூருவில் இருந்து மும்பை வரை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இது தற்போது இறுதி செய்யப்பட்டு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இதுதான் சோஷியல் மீடியா டிரெண்ட்.

பெங்களூரு டூ மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

பெங்களூரு இந்தியாவின் ஐடி தலைநகரம், மும்பை நாட்டின் வர்த்தக தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றுக்கு இடையில் முக்கியமான ரயில் சேவையாக உத்யன் எக்ஸ்பிரஸ் விளங்குகிறது. கடந்த 1983 முதல் பயன்பாட்டில் உள்ளது.

இரண்டு நகரங்களுக்கும் இடையிலான 1,139 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 22 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. பேருந்தில் பயணித்தால் 16 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்த சூழலில் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வந்தால் 16 – 17 மணி நேரம் ஆகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புனே, ராய்ச்சூர் வழியாக அதிவிரைவு பயணம்

விரைவில் வழித்தடம், ரயில் எண், டிக்கெட் கட்டணம், நேர அட்டவணை உள்ளிட்ட தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. புனே, சோலாபூர், கலபுர்கி, ராய்ச்சூர், குண்டக்கல் வழியாக பயணிக்க வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் கவனிக்க மறந்த, அதேசமயம் முக்கியமாக கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்களை பற்றி அலசலாம்.

கலபுர்கி அல்லது ஹூப்ளி – சிக்கலில் ரூட்
  • கலபுர்கி வழித்தடம்: இந்த ரூட்டில் பயணித்தால் 1,136 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். தூரம் குறைவு. அதேசமயம் வேகமாக பயணிக்கலாம். ஆனால் கர்நாடகா மாநிலத்தின் உட்பகுதிகளுக்கு பயன் தராது.
  • ஹூப்ளி வழித்தடம்: இதில் 1,215 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் நேரம் எடுக்கும். அதேசமயம் கர்நாடகா மாநிலத்தின் 6க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வழியே செல்வதால், பொதுமக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ஹூப்ளி வழியாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்க கோரிக்கை வலுத்து வருகிறது.​

துரந்தோ எக்ஸ்பிரஸ் கனவு கலைந்தது

பெங்களூரு – மும்பை வழியாக துரந்தோ எக்ஸ்பிரஸை கொண்டு வரத் தான் திட்டமிடப்பட்டது. இதுகுறித்து ரயில்வே வாரியம் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வந்தே பாரத் என்ற பிராண்ட் மூலம் கவனத்தையும், வருவாயையும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது பிரீமியம் வகை பயணம் என்பதால் சாமானிய மக்களுக்கு பலன் தராது.

விமான சேவையை பின்னுக்கு தள்ளும் டிக்கெட் கட்டணம்

வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் கட்டணம் 3,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி வரும். விமான பயணத்தில் 2,500 ரூபாய் முதல் டிக்கெட்கள் கிடைக்கின்றன. இந்த பயணத்தில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம். அப்படியிருக்க அதிக கட்டணம் கொடுத்து பல மணி நேரமாக ஏன் பயணிக்க வேண்டும்? என்ற கேள்வியை பயணிகள் முன்வைக்க வேண்டும்.