அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி: பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட ஈரான் குழு

லாகூர்,

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.

இதனால், அரபு நாடுகளில் இருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் வரத்து குறைவால் சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

இதனிடையே, ஈரான் , அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 8ம் தேதி அமலுக்கு வந்த போர் நிறுத்தம் 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்த காலகட்டத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மோதலை தடுக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி போர் நிறுத்தம், அமைதி பேச்சுவார்த்தை குறித்து இரு தரப்பும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பஹர் கலிபாப் தலைமையிலான குழுக்கள் இடம்பெற்றிருந்தன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 21 மணிநேரம் நீடித்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இரு தரப்பும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஈரான் சபாநாயகர் முகமது பஹர் கலிபாப் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினரும் இன்று பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் ஈரான் புறப்பட்டு சென்றனர்.

Source link