மக்கள்தொகை கணக்கெடுப்பு; ஜாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை கேட்க முடிவு

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, பிரிட்டீஷ் ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. 16-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, நடத்தப்படவில்லை.இந்த நிலையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மேம்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க உள்ளது.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, வீடுகள் பட்டியல் கணக்கெடுப்புப் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களிடம் 33 கேள்விகள் கேட்கப்பட்டன.

தமிழக அரசு அரசிதழ்

இதற்கிடையே, வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

வங்கி கணக்கு விவரங்கள்

அதன்படி, குடும்பத் தலைவருடனான உறவுமுறை, பாலினம், பிறந்த தேதி மற்றும் வயது, தற்போதைய திருமண நிலை, தேசியம், மதம், ஜாதி, தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகள், எழுத்தறிவு, டிஜிட்டல் அறிவு நிலை, அதிகபட்ச கல்வித் தகுதி, பொருளாதார நடவடிக்கையின் வகை, வேலை செய்பவர்கள் மற்றும் வேலை செய்யாதவர்கள், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடப்பெயர்வுக்கான காரணம், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட இடம், வங்கிக் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட உள்ளன.

மேலும், கைபேசி எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், பாஸ்போர்ட் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாகவும் கேள்விகள் இடம்பெற உள்ளன. மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link