செஞ்சி மாவட்டம் ஆலம்பூண்டியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி காணாமல் போய் இன்றுடன் 18 நாட்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை அந்தச் சிறுமியின் வழக்கில் எந்தவித அதிகாரப்பூர்வ முன்னேற்றமும் இல்லை.
அவர் எங்கு இருக்கிறார், என்ன ஆனார், உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்த எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை.
பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே மாயமான சிறுமி
செஞ்சி மாவட்டம் ஆலம்பூண்டி நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா என்ற ஏழு வயது சிறுமி. இவர் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, சில மணி நேரங்களிலேயே காணாமல் போயிருக்கிறார்.
பிறந்தநாள் அன்று தனது தாயுடன் உறங்கிய சிறுமி, விடியற்காலையில் காணாமல் போயிருக்கிறார். இதுகுறித்து முதல் 10 நாட்கள் தமிழக போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயக் கிணறுகள் முதல் பள்ளி வரை தீவிர விசாரணை
ஆலம்பூண்டி பகுதியில் சுற்றியிருக்கக்கூடிய விவசாயக் கிணறுகள், பாறைப் பகுதிகள், ஆள் நடமாட்டம் இல்லாத காடுகள், சிறுமி படித்த பள்ளி, பெற்றோர் எனஅனைத்துத் தரப்பிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை என்ற மூதாட்டி ஒரு மிக முக்கியமான தகவலைக் கொடுத்திருக்கிறார்.
மூதாட்டி வாக்குமூலம்
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணி அளவில் தனது மகன் பேருந்தில் ஏறுவதற்காக எழுந்ததால் தானும் அவருடன் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், அவர் கூறியதாவது: “பையன் போன உடனே நான் உள்ள வந்து கதவைச் சாத்திப் படுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்திலேயே வீட்டுக் கதவை மூணு வாட்டி தட்டுற மாதிரி சத்தம் கேட்டது. ஏதாவது அவசரம்னா பையன் போன் பண்ணுவான். கதவு தட்டுற சத்தம் கேட்டதும் நான் பயந்துட்டு கதவு திறக்காமல் படுத்துக்கிட்டேன்.”
காலையில் எழுந்து பார்த்தபோதுதான் குழந்தை காணாமல் போனதே தெரியவந்தது எனக் கூறினார்.
‘அம்மா, அம்மா’ எனக் கத்தும் சத்தம்
அதேபோல, குழந்தை காணாமல் போன அன்று விடியற்காலையில் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் ‘அம்மா, அம்மா’ எனக் கத்துவது போன்ற சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது யாரும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
வழக்கை மேலும் சிக்கலாக்கும் மாறுபட்ட வாக்குமூலங்கள்
இப்படி மாறுபட்ட வாக்குமூலங்கள் இந்த வழக்கை மேலும் சிக்கலாக்கியிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில்தான், கதவை யாரோ தட்டுவதுபோல் இருந்தது என மூதாட்டி கூறிய வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்
ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் இந்த மாதம் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர்.தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
செஞ்சி அருகே குழந்தை காணாமல் போன விவகாரம்…இறங்கி அடிக்கும் திமுக
இப்படிப்பட்ட சூழலில், இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி காணாமல் போய் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பெரும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதோடு, 18 நாட்களாக எந்தவிதத் தகவலும் கிடைக்காதது உண்மையிலேயே தமிழகக் காவல்துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Source link
