அனிருத் தாய்: இளம் வயதிலேயே இசையமைப்பாளரானதுடன், தன் முதல் படத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் அனிருத் ரவிச்சந்தர். அவர் இசையமைத்த முதல் படமான தனுஷ் நடித்த 3 படத்தில் வந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் இன்றளவும் பிரபலம். அனிருத் ரொம்ப கடின உழைப்பாளி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் அடிக்கடி கூறுவது உண்டு.
இந்நிலையில் தன் மகனின் அர்ப்பணிப்பு பற்றி அம்மா லட்சுமி ரவிச்சந்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து பாராட்டுகிறார்கள். விஜய் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியான டிடியிடம் அனிருத் பற்றி அவரின் அம்மா கூறியதாவது,
அனிருத் வரல: 3 படத்தில் வேலை செய்ய ஆரம்பித்தபோது அனிருத்துக்கு 19 வயது தான். ஏ.ஆர். ரஹ்மான் சாரின் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தார்கள். இரவு, பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தான். வேலை இருப்பதால் 6 நாட்களாக அனிருத் வீட்டிற்கே வரவில்லை.
செல்லமாக வளர்த்த பிள்ளை 6 நாட்களாக வீட்டிற்கு வராதபோது அவனை பார்க்கணும் என ஆசையாக இருந்தது. இருந்தாலும் போன் செய்தால் எடுக்க மாட்டான். இன்று வரை போன் போட்டால் எடுக்கவே மாட்டான். அதனால் அனிருத்துக்கு போன் செய்வதால் ஒரு பயனும் இல்லை. ஒரு நாள் காலை 6 மணி இருக்கும். இனியும் என் குழந்தையை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என்று தோன்றியது.
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நானே காரை எடுத்துக் கொண்டு நேராக ஏ.ஆர். ரஹ்மான் சார் ஸ்டுடியோவுக்கு கிளம்பிவிட்டேன். ஸ்டுடியோ வாசலில் இருந்த காவலாளியிடம், இங்கு ஒரு புதுப்பையன் ரெக்கார்டிங் செய்கிறான் அல்லவா, நான் அவன் அம்மா. அவனை பார்க்க வந்திருக்கிறேன் என்றேன். உள்ளே போய் பாருங்கம்மா என்றார் காவலாளி.
தூங்கிய அனிருத்: என் மகனுக்கு குளிர் தாங்க முடியாது. ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பயங்கர குளிராக இருக்கும். வேலையை முடித்துவிட்டு இப்போ தான் ஓய்வெடுக்க சென்றார் என சொன்னார்கள். எங்கே என்று கேட்டுவிட்டு மேலே சென்று பார்த்தால் நடுங்கும் குளிரில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் நாங்கள் அவனுக்கு கீ போர்டு வாங்கிக் கொடுத்தோம். அந்த புது கீபோர்டின் கவரை ஸ்லீப்பிங் பேக் மாதிரி பயன்படுத்தி தூங்கிக் கொண்டிருந்தான்.
அந்த ரெக்சின் கவரில் அவன் தலை மட்டும் வெளியே தெரிந்தது.அதை பார்த்து எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அதே சமயம் என் குழந்தை இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறானே என பெருமையாகவும் இருந்தது. முதல் படத்தில் இவ்வளவு அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறான் என தோன்றியது. அவன் அந்த கீபோர்டு கவருக்குள் தூங்கியதை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என்றார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அனிருத் பழக்கம்: இசையமைக்கும் பணியை ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை நேரம் பார்க்காமல் உழைக்கிறார் அனிருத். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஊர் தூங்கச் சென்ற பிறகு இரவு நேரத்தில் தான் இசையமைப்பார். ஊர் உலகம் எல்லாம் காலையில் கண் விழித்து வேலைக்கு செல்லும்போது அவர் தூங்கிச் சென்றுவிடுவார். இது உடல்நலத்திற்கு நல்லது இல்லை என்றாலும் மகனுக்கு வேலை செய்ய வசதியாக இருப்பதால் அவரை கேள்வி கேட்காமல் இருப்பதாக அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா அண்மையில் தெரிவித்தார்.
Source link
