Joint Home Loan,கடன் வாங்கி கட்டிய வீடு: கணவன் இறந்தால் கடனை யார் கட்டுவது? மனைவி மட்டும் பொறுப்பா? – what will happen if one person who took out a joint home loan dies

சொந்தமாக வீடு வாங்குவது என்பது பலருக்கு மிகப்பெரிய கனவாகவே இருக்கும். சொத்துகளின் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் காரணமாக தற்போதைய சூழலில் கடன் பெறாமல் வீடு வாங்குவது என்பது பலருக்கு கடினமாக உள்ளது. வீட்டுக் கடன் என்பது வீட்டின் விலையை பல ஆண்டுகளுக்குத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த உதவுகிறது. பலர் தங்கள் வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப உறுப்பினருடன் இணைந்து கூட்டுக் வீட்டுக் கடனைப் பெறுகிறார்கள். இது கடன் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதுடன், இரு தரப்பினரும் இணைந்து மாதாந்திரத் தவணைகளை செலுத்தவும் வழிவகுக்கிறது.

ஆனால், வீட்டுக் கடன்களின் காலம் 15 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கலாம். இந்தக் காலக்கட்டத்தில் கடன் வாங்கியவர்களில் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் பல்வேறு நிதிச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். அத்தகைய சூழலில் மீதமுள்ள கடனை யார் திருப்பிச் செலுத்துவார்கள்? நம்முடைய வீட்டை கடன் வழங்கிய வங்கி கைப்பற்றிக் கொள்ளுமா போன்ற பல கேள்விகள் இருக்கின்றன. அதுகுறித்த விதிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

வீட்டுக் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் என்ன நடக்கும்?

வீட்டுக் கடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படுவதற்கு முன்பே கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், அந்த வீட்டுக் கடனுடன் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளதா என்பதை வங்கி முதலில் சரிபார்க்கும். வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த காப்பீடு, கடன் வாங்கியவர் இறக்கும் பட்சத்தில் நிலுவையில் உள்ள வீட்டுக் கடனை அடைக்க உதவுகிறது. கடனுக்கு உரிய காப்பீட்டுத் திட்டம் இருந்தால் அதன் விதிமுறைகளின்படி காப்பீட்டு நிறுவனம் நிலுவையில் உள்ள கடன் தொகையைச் செலுத்திவிடும். இது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய குடும்பத்தினரின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும். இருப்பினும், காப்பீட்டு நிறுவனம் எவ்வளவு தொகையைச் செலுத்தும் என்பது அந்த பாலிசியின் பாதுகாப்பு வரம்பு (Coverage), விதிமுறைகள் மற்றும் நிலுவையில் உள்ள கடன் தொகை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

கூட்டு வீட்டுக் கடனில் மற்ற நபரின் பொறுப்பு என்ன?

கணவன் – மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்கள் இருவர் இணைந்து வீட்டுக் கடன் பெற்றிருக்கும் சூழலில் அவர்களில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் தொடர்ந்து கடன் தவணைகளை செலுத்த வேண்டியிருக்கலாம். ஏனெனில், கூட்டுக்கடனைப் பொறுத்தவரை, கடன் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி, கடன் வாங்கிய இருவருமே அந்தக் கடனுக்குப் பொறுப்பாவார்கள். உதாரணமாக, கணவன் – மனைவி இருவரும் இணைந்து வீடு வாங்குவதற்காக ரூ. 40 லட்சம் கடன் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் கணவர் இறந்துவிட்டால் மீதமுள்ள கடனை மனைவி திருப்பிச் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். ஒருவேளை வீட்டுக் கடன் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டுத் தொகையைக் கொண்டு நிலுவையில் உள்ள கடனைக் குறைக்கவோ அல்லது முழுமையாக அடைக்கவோ முடியும்.

தவணைத் தொகையைச் செலுத்த முடியாவிட்டால் என்ன நடக்கும்?

கடன் வாங்கியவர்களில் எஞ்சியிருப்பவர் நிதி நெருக்கடியின் காரணமாகத் தவணைத் தொகையைச் செலுத்த முடியாவிட்டால் வங்கி பிணையாளரிடம் (Guarantor) பணம் கோரலாம். சட்டப்பூர்வ வாரிசுகளின் பொறுப்புகள், அவர்களின் சட்ட அந்தஸ்து மற்றும் அவர்கள் பெற்றுக்கொண்ட சொத்துகள் போன்ற காரணிகளைப் பொறுத்தே அமையும். குடும்ப உறுப்பினர் என்பதாலேயே ஒருவர் தானாகவே கடனைத் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டவர் ஆகிவிட மாட்டார். அத்தகைய சூழலில், குடும்பத்தினர் வங்கியுடன் தொடர்புகொண்டு, கூடுதல் அவகாசம் கேட்கலாம். கடன் நிபந்தனைகளில் மாற்றம் செய்யக் கோரலாம் அல்லது தற்காலிகமாகத் தவணை செலுத்துவதில் விலக்கு கோரலாம். அந்தந்தச் சூழல் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் வங்கி இதைப் பரிசீலிக்கலாம்.

இருப்பினும், நீண்ட காலம் கடன் செலுத்தப்படாமல் இருந்து மற்ற மீட்பு நடவடிக்கைகளும் பலனளிக்காத பட்சத்தில், சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றி, அடமானம் வைக்கப்பட்ட சொத்தை விற்பனை செய்வதன் மூலம் வங்கி தனது பணத்தை மீட்க முயற்சி செய்யும். எனவே, கூட்டு வீட்டுக் கடன் பெறும்போது ​​காப்பீட்டு நிபந்தனைகளைப் புரிந்துகொள்வது, கடன் ஒப்பந்தத்தை முழுமையாக வாசிப்பது மற்றும் குடும்பத்திற்காக அவசரகால நிதி ஒன்றைச் சேமித்து வைத்திருப்பது அவசியம். எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும்போது, ​​இது குடும்பத்தை நிதி நெருக்கடியிலிருந்து பாதுகாக்க உதவும்.

Source link