MSP For Rabi Crops,ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் – central govt estimates 90962 crore rupees in msp for rabi crops during the 2027–28 year

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை உத்தரவாதம் அளிப்பதிலும், அவர்களின் வேளாண் முதலீடுகளைப் பாதுகாப்பதிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) திட்டம் மிக முக்கிய கொள்கை முடிவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2027-28ஆம் ஆண்டின் ரபி சந்தைப் பருவத்திற்கான அனைத்து அத்தியாவசிய பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க மத்திய அரசு செப்டம்பர் 30ஆம் தேதியன்று ஒப்புதல் அளித்தது.

இந்த விலை உயர்வு மூலம் 324 லட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளதுடன், விவசாயிகளுக்கு நேரடியாக ரூ. 90,962 கோடி வழங்கப்படவுள்ளது. முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது, தற்போதைய காலகட்டத்தில் ரபி பயிர்களின் கொள்முதல் அளவு 2,302 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 3,921 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆதரவு விலைத்தொகை ரூ.2.65 லட்சம் கோடியிலிருந்து ரூ.8.36 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

விலை நிர்ணய முறை மற்றும் காரணிகள்!

வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் 22 வகையான பயிர்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து வருகிறது. பயிர் சாகுபடிச் செலவு, சந்தை வரத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்கள் ஆகியவை ஆராயப்படுகின்றன. மனித உழைப்பு, மாட்டு வண்டி/இயந்திர வாடகை, நிலக் குத்தகை, விதைகள், உரங்கள், பாசனம் மற்றும் குடும்பத்தினரின் உழைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. சாகுபடிச் செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீத கூடுதல் லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பயிர்களுக்கான விலை உயர்வு மற்றும் லாபம்!

2027-28 ரபி பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் முக்கிய மாற்றங்கள்: குங்குமப்பூ: குவிண்டாலுக்கு ரூ.675 உயர்த்தப்பட்டுள்ளது. கடுகு: குவிண்டாலுக்கு ரூ.413 உயர்த்தப்பட்டுள்ளது. மசூர் பருப்பு: குவிண்டாலுக்கு ரூ.390 உயர்த்தப்பட்டுள்ளது. பார்லி: குவிண்டாலுக்கு ரூ.136 உயர்த்தப்பட்டுள்ளது.உற்பத்திச் செலவை ஒப்பிடுகையில், கோதுமைக்கு அதிகபட்சமாக 106 சதவீதமும், கடுகுக்கு 96 சதவீதமும், மசூருக்கு 92 சதவீதமும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நியாயமான வருவாயை வழங்குவதுடன், பயிர் சாகுபடியில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

நேரடி கொள்முதல் மற்றும் டிஜிட்டல் நடைமுறைகள்!

தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் இந்திய உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன. பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பிரதமரின் விவசாயிகள் வருவாய் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நாஃபெட் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன. இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்த்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, இ-சம்ரித்தி, இ-சம்யுக்தி போன்ற டிஜிட்டல் தளங்கள் வாயிலாக விவசாயிகள் பதிவு செய்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்தப்படுகிறது. மேலும், தகுதியான விவசாயிகளை உறுதி செய்ய கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link