பாகிஸ்தானில் தற்போது முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடைசி லீக் போட்டியில், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. ஏற்கனவே, இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்டதால், இப்போட்டி, முக்கியத்துவம் இல்லாத போட்டியாகதான் இருந்தது.
இருப்பினும், இத்தொடரில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியைக் கூட பெறாத காரணத்தினால், கடைசிப் போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து இன்னிங்ஸ்: இப்போட்டியில், டாஸை இழந்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பேட்டிங் ஆடிய அனைத்து பேட்டர்களும் அபாரமாக செயல்பட்டு அசத்தினார்கள்.
ஓபனர் டாம் பண்டன் 75 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 74 ரன்களை அடித்த நிலையில், மற்றொரு ஓபனர் பென் டக்கெட், 132 பந்தில் 24 பவுண்டரி உட்பட 167 ரன்களை குவித்து அசத்தினார். இதில், ஒரு பவுண்டரி கூட இல்லை.
அடுத்து, ஒன்டவுன் பேட்டர், கேப்டன் ஹேரி ப்ரூக், அபாரமாக செயல்பட்டு 34 பந்தில் 44 ரன்களை அடித்த நிலையில், வில் ஜாக்ஸ், 21 பந்தில் 30 ரன்களை சேர்த்தார். பிறகு, இறுதிக் கட்டத்தில், ஜோர்டன் காக்ஸ் 27 பந்தில் 43 ரன்களையும், சாம் கரண் 12 பந்தில் 21 ரன்களையும், கடைசி நேரத்தில் குவித்ததால், இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 386/5 ரன்களை எடுத்தது.
இலங்கை இன்னிங்ஸ்: இதற்குமுன், இத்தொடரில் இங்கிலாந்து அணி, 429 ரன்களை அடித்தபோது, இலங்கை அணி அதனை வெற்றிகரமாக சேஸ் செய்ததால், இப்போட்டியிலும் 387 ரன்கள் இலக்கை இலங்கை துரத்தி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல், இலங்கையும் அபாரமாக பேட்டிங் ஆடியது.
ஓபனர் கமிந்து மெண்டிஸ் 4 (11) அவுட் ஆனப் பிறகு, அவிக்ஷா பெர்ணான்டோ 50 பந்தில் 48 ரன்களை அடித்த நிலையில், கேப்டன் குஷல் மெண்டிஸ் 71 பந்தில் 89 ரன்களை எடுத்து அசத்தினார். பிறகு, பவன் ரத்னயகே 77 பந்தில் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 118 ரன்களை அடித்த நிலையில், இறுதிக் கட்டத்தில், ஜனத் லியனகே 27 (17), சஹன் அரச்சிகே 30 (24) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இருப்பினும், வெற்றிக்கு தேவையான ரன்களை இலங்கை அணியால் அடிக்க முடியவில்லை. இறுதியில், இலங்கை அணி, 45.1 ஓவர்கள் முடிவில் 331/10 ரன்களை மட்டும் எடுத்து, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இங்கிலாந்து அணி பௌலர், லியான் டாசன் 10 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். சோனி பேக்கர், 9 ஓவர்களில் 75 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.
இறுதிப் போட்டி, அக்டோபர் 31ஆம் தேதி லாகூரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி, பிற்பகல் 1:30 மணிக்கு போட்டி துவங்கும்.
பாகிஸ்தான் அணி, இத்தொடரில் ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்து பைனலுக்கு முன்னேறியுள்ளது. மறுபக்கம், இத்தொடரில் இலங்கை அணி பெரிய பெரிய ரன்களை அடித்து வியக்க வைத்திருப்பதால், பைனல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
