ட்ரம்ப் போட்ட தப்பு கணக்கு… வெனிசுலாவில் பலிச்சது, ஈரானில் மிஸ் ஆனது ஏன்?- இறங்கி வரும் அமெரிக்கா! – donald trump underestimate iran in strait of hormuz war impact

சர்வதேச அளவில் ஈரானுக்கு எதிரான போரின் தாக்கங்கள் எதிரொலித்து வருகின்றன. வெனிசுலா போல எளிதாக முடிந்து விடும் என்று கணக்கு போட்டு வைத்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்தடுத்து பின்னடைவாக சம்பவங்களாக அரங்கேறி வருகின்றன.

ஈரான், அமெரிக்கா இடையிலான போர் தொடங்கி இன்றுடன் 44 நாட்கள் ஆகின்றன. இந்த போரால் சர்வதேச ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு பாகிஸ்தான் மத்தியஸ்த பேச்சுவார்த்தை முயற்சியில் இறங்கியுள்ளது. ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா போரால் ஹார்மூஸ் நீரிணையின் கதவுகளை இறுக்கத் தொடங்கினர். இதை யாருமே கணிக்கவில்லை என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் ராணுவ ஆலோசகர்கள் சரியாக கணிக்க தவறிவிட்டனர் எனத் தெரிகிறது.

ஆசியாவின் கச்சா எண்ணெய் வழித்தடம்

ஹார்மூஸ் நீரிணையில் நாள் ஒன்றுக்கு 130 கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. தற்போதைய போர்ச் சூழலில் 4 முதல் 5 கப்பல்கள் மட்டுமே ஈரானால் அனுமதிக்கப்படுகின்றன. ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகள் வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய்யை நம்பி தான் இருக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்னர், ஐரோப்பிய நாடுகளும் வளைகுடாவில் உள்ள எண்ணெய்யை தான் நம்பியிருக்கின்றனர். ஏனெனில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மஸ்க் மற்றும் ட்ரம்ப் இடையிலான மோதலில் உண்மை என்ன?

ரஷ்யா மீது பொருளாதார தடைகள் நீக்கம்

ஆனால் ஈரானுக்கு எதிரான போரில் ஏற்பட்ட நெருக்கடியை பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை விலக்கி வைத்தார். இன்னும் சொல்லப் போனால் ஈரான் மீதான பொருளாதார தடைகளை விலக்கி வைக்கும் அளவிற்கு நெருக்கடி அதிகரித்தது. துவரை நடந்து முடிந்துள்ள போரில் அமெரிக்காவின் கை ஓங்கியிருக்கிறதா? என்று பார்த்தால் கொஞ்சம் கூட இல்லை என்கின்றனர். ஏனெனில்,

வ.எண் போரில் ட்ரம்ப் போட்ட கணக்கு
1 அணுசக்தி நாடாக ஈரான் மாறுவதை முழுவதுமாக தடுத்து நிறுத்தப் போகிறேன்
2 440 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை ஒப்படைத்துவிட வேண்டும்
3 ஹவுதிஸ், ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியோருக்கு ஈரான் செய்யும் உதவிகளை நிறுத்தி விட வேண்டும் என்று எச்சரித்தார்
4 எரிசக்தி ஏவுகணைகளை 1,000 கிலோமீட்டர் தூரத்தை தாண்டி செல்லாதவாறு ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி விட வேண்டும்

இந்த நிபந்தனைகள் எதையுமே ஈரான் செவிகொடுத்து கேட்கவில்லை. இதற்கான ஆரம்பிக்கப்பட்ட போரானது, ஒருகட்டத்தில் ஹார்மூஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்பதை நோக்கி நகர்ந்துவிட்டது. போரின் பிரதான நோக்கமாக இந்த நீரிணை விவகாரம் மாறியது. ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நாள் ஒன்றுக்கு செய்யும் செலவு 15,000 கோடி ரூபாய். ஆனாலும் சொல்லி கொள்ளும் படியான வெற்றியை பெற முடியவில்லை.

ட்ரம்ப் விதித்த கெடு – அடுத்தடுத்து நீட்டிப்பு
  • அமெரிக்காவிற்கு அடிபணிய வேண்டும் என்று மார்ச் 21ஆம் தேதி 2 நாட்கள் கெடு விதித்தார் ட்ரம்ப்.
  • அதன்பிறகு 5 நாட்கள் நீட்டித்தார்.
  • இதையடுத்து 10 நாட்கள் கெடுவை நீட்டித்தார்.
  • கடைசியாக மேலும் ஒருநாள் கெடுவை நீட்டித்து உத்தரவிட்டார்.

இவ்வளவு இறங்கி வந்தும் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரவில்லை. அமெரிக்காவின் நிபந்தனைகளையும் ஏற்கவில்லை. எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நிலையில் காணப்படுகின்றனர். ராணுவ வலிமை, பொருளாதார வலிமையில் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் சமாளித்து திருப்பி அடித்து கொண்டே இருப்பது ஒருபுறம் ஆச்சரியம் அளித்தாலும், டிரம்பை கடும் ஏமாற்றத்தை தள்ளி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஈரானின் ராணுவ பலத்தை உற்றுநோக்கினால் பெரிய அளவில் செலவு செய்வதில்லை.

ஈரான் vs அமெரிக்கா இடையில் சமமற்ற போர்

அவர்கள் பயன்படுத்தும் ட்ரோன்கள், ஏவுகணைகளின் மதிப்பு 20,000 டாலர் மட்டுமே. இதைத் தடுத்து அழிப்பதற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வைத்திருக்கும் இண்டர்செப்டார்களின் மதிப்பு 40 லட்சம் டாலர். இந்த ஒப்பீடே வியப்பை தருகிறது. போர்ச்சூழலில் சமமற்ற போராகவே பார்க்க வேண்டியுள்ளது. அமெரிக்காவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக, உலகின் மிகப்பெரிய வல்லரசின் தலைவராக தன்னுடைய சக்தியை முழுவதும் காட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ட்ரம்ப் செயல்படுகிறாரோ? என்ற கேள்வி எழுகிறது.

வெனிசுலாவில் அந்நாட்டிற்குள் புகுந்து மிகவும் தந்திரமான முறையில் பாதுகாவலர்களை கொன்று அதிபரை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு வந்தனர். இது ட்ரம்பிற்கு மிகப்பெரிய விஷயத்தை சாதித்துவிட்டதாக பெருமிதத்தை தந்தது. அந்த உற்சாகத்தில் தான் ஈரான் மீது தாக்குதலை தொடங்கினார். ஆனால் தான் வைத்த பொறியில் தானே சிக்கிக் கொண்டாரோ என்று கேட்கும் வகையில் தவித்து வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானியர்கள் நடத்தும் பேச்சுவார்த்தை, அடுத்தகட்ட நகர்வுகள் மூலம் இந்த போர் இன்னும் என்னென்ன செய்யப் போகின்றன என்று பார்க்கலாம்.