அரசின் நலத்திட்டங்கள் லஞ்சமின்றி ஒவ்வொருவரையும் நேரடியாகச் சென்றடையப் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், அரசாங்கமே மக்கள் வாசலுக்கு வரும் என்றும் விஜய் உறுதியளித்துள்ளார்.
புதிய நலத்திட்ட அட்டை (Welfare Card) திட்டம்
பிரச்சார மேடையில் பேசிய விஜய், தனது ஆட்சியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைத்தரகர்களை முழுவதுமாக ஒழிக்கப் போவதாகத் தெரிவித்தார். லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் நேரடியாகச் சென்று சேரும். அதற்கெனப் பிரத்யேகமாக ஒரு நலத்திட்ட அட்டை வழங்கப்படும். பொதுமக்கள் ஒவ்வொரு சிறு வேலைக்கும் லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை. அரசாங்கமே உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் , என்று அவர் உறுதிபடக் கூறினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடி பதிலடி
திமுக-வின் கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளைக் கிண்டல் செய்யும் விதமாக விஜய் பேசுகையில்,
இது ஏதோ தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் சார் விடும் கதை இல்லை. நான் சொல்வது அனைத்தும் அறிவியல் பூர்வமாக (Scientifically) சாத்தியமான ஒன்று. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு ரூபாயும் தகுதியானவர்களுக்கு லஞ்சமில்லாமல் போய்ச் சேர்வதை நாங்கள் உறுதி செய்வோம், என ஆவேசமாக உரையாற்றினார்.
குமரியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். காரைக்குடியில் சில நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசலால் சைக்கிள் ஓட்ட முடியாமல் போன நிலையில், இன்று கன்னியாகுமரியின் முக்கிய வீதிகளில் அவர் சைக்கிள் ஓட்டித் தனது ‘விசில்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இதைக் காண லட்சக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் திரண்டதால் குமரி மாவட்டமே விழாக்கோலம் பூண்டது.
கள நிலவரம்
விஜய்யின் இந்த ‘அறிவியல் பூர்வமான நலத்திட்ட அட்டை’ வாக்குறுதி, குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திமுக-வின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ போன்ற திட்டங்களுக்குப் போட்டியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
