சென்னை,
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் சேது.கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாரனை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய பாஜக அரசு வீடு தோறும் தண்ணீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 4835 கோடியினை தமிழகத்திற்கு ஒதுக்கி இருந்தும். சிவகங்கை மாவட்டம் மாத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் குடிதண்ணீர் கிடைக்காததால் அந்த கிராம மக்கள் கிராமத்தை விட்டு சென்று விட்டதாக கூறி திமுக அரசை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
ஆனால் நாட்டாகுடி கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை மற்றும் குடிதண்ணீர் பிரச்சினை ஏதும் இல்லை. அங்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமைக்கப்பட்டு இலவசமாக கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
சாலை வசதி, தெருவிளக்கு வசதி உட்பட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வசித்து வருகின்றனர். மேலும் தங்கள் கிராமத்து விவசாய நிலங்களை கால்நடைகளில் இருந்து பாதுகாக்க விவசாய நிலங்களை சுற்றி வெளி சுத்து வேலி அமைத்து விவசாயம் மேற்கொண்டு முன்மாதிரி விவசாய கிராமமாக வருகின்றனர். தமிழக அரசும் கண்மாய் மடைகளை சீரமைத்து கால்வாய்களை தூர்வாரி கருவேல மரங்களை அகற்றி தனது கடமையினை சிறப்பாக செய்திருக்கிறது.
இது பற்றி ஏதும் அறியாத பாஜக தலைவர் அண்ணாமலை யாரோ எழுதிக் கொடுத்ததை வாயில் வந்தபடி பேசி சென்றிருப்பது வேதனைக்குரியது. நான் நாட்டாகுடி கிராமத்திற்கு சென்று நேரில் இதனை பார்த்துள்ளேன். இனியாவது பிறரை விமர்சிக்கும் முன்னர் அதனை அறிந்து அண்ணாமலை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
