ஆஷா போஸ்லே மறைவு: ஏ.ஆர். ரகுமான் இரங்கல்

பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே மும்பையில் வசித்து வந்தார். 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அவருக்கு சுவாச பிரச்சினை இருந்ததால் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆஷா போஸ்லே இன்று மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

1943-ல் தனது இசை பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லே, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.தாதாசாகேப் பால்கே விருது, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் பிரபலமான செண்பகமே… செண்பகமே, சந்திரமுகி படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், மீரா படத்தில் ஓ பட்டர்பிளை, சேதுபதி ஐபிஎஸ், நேருக்கு நேர், புதுப்பாட்டு உள்ளிட்ட படங்களிலும் பாடலை பாடியுள்ளார்.

ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.ஆர். ரகுமான் பழம்பெரும் பாடகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் “ஆஷா போஸ்லே அவரது குரல் மற்றும் வசீகரத்தால் என்றைக்கும் நம்முடன் வாழ்வார். திறமையான கலைஞர் மறைந்துவிட்டார்” என்று பகிர்ந்துள்ளார்.

Source link