சென்னையில் பிரபல நகை கடையில் 25 பவுன் நகைகள் திருட்டு – ஊழியர் கைது

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் இருப்பு நகைகளை சரிபார்த்தபோது, சுமார் 25 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நகைக்கடை சார்பில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நகையை திருடியது கடையில் ஊழியராக வேலை பார்த்த சிவாதேவ் (வயது 32) என்று தெரியவந்தது. சிவாதேவ் சென்னை கொளத்தூரை சேர்ந்தவர். கடையில் நீண்ட காலமாக நகை பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்தார். கடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 25 பவுன் நகைகள் வரை அவர் திருடிச் சென்றுள்ளார்.

போலீசார் சிவாதேவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நகைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். 10 பவுன் நகைகளை திருப்பி கொடுத்துவிட்டார். மீதி நகைகளை திருப்பி கொடுப்பதாக ஒப்புக்கொண்ட அவர், திடீரென்று தலைமறைவாகிவிட்டார். இதனால் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

Source link