‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகவில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரகாஷ் ராஜ்

சென்னை,

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்பிரிட்’. இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

மேலும், பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுடன், கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நச்சுத்தன்மை கொண்ட போலிச் செய்தி பரப்புபவர்களே, ‘ஸ்பிரிட்’ படத்துக்கான எனது காட்சிகள் இன்னும் படமாக்கப்படவே இல்லை. அதற்குள்ளாகவே உங்கள் ‘வாட்ஸ்அப் தொழிற்சாலைகள்’ பல கதைகளை உருவாக்கி வருகின்றன. இனியாவது வளர்ந்து உருப்படியான வேலையைப் பாருங்கள்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

Source link