சென்னை,
மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியும், பிரபல பின்னணி பாடகியுமான ஆஷா போஸ்லே, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஷா போஸ்லே மறைவுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய இசை உலகின் மறக்க முடியாத குரல்களில் ஒன்றாக, இந்தியா நேசித்த பன்முகத் திறமை வாய்ந்த குரல் கொண்ட ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
80 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த ஆஷா போஸ்லே, இந்தி மட்டுமன்றி தமிழ் உட்பட பல மொழிகளில் எண்ணற்ற இனிய திரைப்படப் பாடல்களையும், கசல், பாப், பஜன் போன்ற அனைத்து இசை வடிவங்களில் தனித்திறமையை வெளிப்படுத்தி இசை ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தைப் பிடித்தார். தமிழ்த் திரையிசையிலும் அவரது குரல் தனித்துவமான இனிமையால் பிரத்யேகமாகவும், புதிய தலைமுறைகளையும் கவரக்கூடியதாகவும், இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை உலகிற்கு நிலைநாட்டிய பெருமையுடையதாகும். கலை எல்லைகளைத் தாண்டி மக்களின் உணர்வுகளுடன் இணையக் கூடிய அவரது திறமை, அவரை ஒரு காலத்தால் அழியாத கலைஞராக மாற்றியது.
பல தேசிய விருதுகளையும், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ஆஷா போஸ்லே இசை வரலாற்றிலேயே மிக அதிகமான பாடல்களைப் பதிவு செய்த கலைஞராக இவரின் பெயர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
அவரது மறைவு, இந்திய இசை உலகிற்கு மட்டுமன்றி, கலாசார பாரம்பரியத்திற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்த துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை உலகினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆஷா போஸ்லேவின் நினைவு, அவர் பாடிய எண்ணற்ற இனிய பாடல்களின் மூலம் என்றும் நிலைத்து நிற்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
