வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் வருகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இந்திய ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரம் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சென்னை சென்ட்ரல் – மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இந்நிலையில் தமிழகத்தை கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை பார்க்க முடிகிறது. இது 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 497 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி 30 நிமிடங்களில் கடந்து விடுகிறது. 20607 / 20608 ஆகிய எண்களில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
இந்த வந்தே பாரத் ரயிலானது காட்பாடி, கே.எஸ்.ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷன் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை – மைசூரு வழித்தட வந்தே பாரத் ரயிலில் அதிக பயணிகள் பயணிக்க ஆர்வம் காட்டி வருவது தொடர்பான 4 பின்னணி காரணங்களை விரிவாக பார்க்கலாம்.
மூன்று மெகா சிட்டிகளின் இணைப்பு
20607 / 20608 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது சென்னை, பெங்களூரு, மைசூரு என மூன்று பெரிய நகரங்களை இணைக்கிறது. இதில் சென்னை நகரானது கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் முனையமாக திகழ்கிறது. பெங்களூரு நகரானது இந்தியாவின் ஐடி தலைநகர் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் ஸ்டார்ட்-அப் தலைநகர் என்ற சிறப்பை பெற்றிருப்பதால் முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் ஏராளமாக கொட்டி கிடக்கின்றன. மைசூரு நகரானது சிறந்த கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாக காணப்படுகிறது. எனவே வேலை விஷயமாகவும், சுற்றுலாவிற்காகவும் இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையில் பயணிப்பவர்கள் அதிகம்.
ஐடி, தொழில்துறை வழித்தடம்
சென்னையை ஒட்டி அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், பெங்களூருவை ஒட்டி அமைந்துள்ள ஓசூர், மைசூருவில் உள்ள தொழிற்சாலைகள், ஐடி பூங்காக்கள் தென்னிந்திய அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் வர்த்தகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதியில் தாக்கத்தை செலுத்தி வருகிறது.
எனவே இங்கு பணிபுரிபவர்கள் விரைந்து செல்ல ரயில் அல்லது விமான சேவைகளை பயன்படுத்துகின்றனர். விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள் உடன் வந்தே பாரத் ரயில் இருப்பதால் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மருத்துவ சுற்றுலாவின் மையம்
சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்வதை பார்க்க முடிகிறது. இவர்கள் களைப்பு தெரியாமல், வேறு எந்த அசௌகரியமும் அடையாமல் பயணிக்க வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் பயனளிக்கும். மேலும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் வசதியான அனுபவத்தை இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அளித்து வருகிறது.
பயணம் நேரம் குறைகிறது
சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல சாலை மார்க்கமாக 8 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. அதுவே வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்தால் 4.5 மணி நேரத்தில் சென்றுவிடலாம். மைசூருவிற்கு 6.5 மணி நேரம் தான் ஆகிறது. விமான டிக்கெட்களை விட குறைவாகவும், அதே போன்ற வசதிகள் உடனும் இருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
