மதுரா படகு விபத்து; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

மதுரா

பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் சுற்றுலாவுக்காக உத்தர பிரதேசம் சென்றனர். அவர்கள் யமுனை ஆற்றில் படகு ஒன்றில் புனித பயணம் மேற்கொண்டனர். அப்போது, கடந்த வெள்ளியன்று மதியம், விருந்தாவன் நகரில் கேசி காட் பகுதியருகே பண்டூன் பாலத்தில் இருந்து விழுந்து, ஆற்றில் மிதந்து வந்த டிரம் ஒன்றின் மீது படகு மோதி விபத்து ஏற்பட்டது.

படகில் இருந்த அனைவரும் நீரில் தத்தளித்தனர். அவர்களில் பலர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இந்த நிலையில் இன்று, மோனிகா என்ற பெண் ஒருவரின் உடல் மதுரா நகரின் பங்காளி காட் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதேபோன்று, விருந்தாவன் நகரில் யாஷ் என்ற யுவராஜ் பல்லா (வயது 22) என்ற இளைஞரின் உடலும் மீட்கப்பட்டது.

இதனால், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது என காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் சந்திர ராவத் கூறியுள்ளார். இந்த மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 8 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் என மொத்தம் 10 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். படகில் குறிப்பிட்ட அளவுக்கும் கூடுதலான பயணிகள் இருந்துள்ளனர். போதிய பாதுகாப்பு வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது.

Source link