கோவையில் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பான ஜனநாயகன்: த.வெ.க.வினர் போலீசில் புகார்

கோவை,

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட்ட பிறகு, அவர் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், தணிக்கைக்கு சென்ற இடத்தில் படத்துக்கு சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை 3 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கடந்த 10-ந் தேதி ஜனநாயகன் முழுப்படமும் இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சி அடையச் செய்தது

இதற்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், படக்குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஜனநாயகன் படத்தை இணையத்தில் சட்ட விரோதமாக கசியவிட்டது தொடர்பாக, இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (11-ந்தேதி) கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, சூலூர், பள்ளபாளையம், அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதியில், உள்ளூர் கேபிள் டி.வி.யில் ஜனநாயகன் படம் ஒளிபரப்பப்பட்டது. இது நடிகர் விஜய்யின் ரசிகர்களையும், த.வெ.க.வினரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. குறிப்பிட்ட கேபிள் டி.வி. நிறுவனத்தை தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்த உடன், ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்குள் 2 மணி நேர படம் ஒளிபரப்பப்பட்டுவிட்டது.

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து போலீசிலும் த.வெ.க.வினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் குறிப்பிட்ட உள்ளூர் கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கேபிள் டி.வி.யில் ஜனநாயகன் படம் வெளியான சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link