அடுத்த தேர்தல்களில் பயோமெட்ரிக் முறை? தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

புது டெல்லி,

தேர்தலில் ஆள்மாறாட்டம் மற்றும் கள்ள ஓட்டு முறைகேடுகளை தடுக்கும் வகையில் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் அடிப்படையிலான பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சுப்ரீம்கோர்ட்டு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மல்யா பாக்ஜி அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரரான வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் பயோமெட்ரிக் அடையாள முறையை கொண்டு வந்தால் போலி வாக்குகள் மற்றும் ஒரே நபர் பல முறை வாக்களிப்பது போன்ற முறைகேடுகளை தடுக்கலாம் என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிமன்றம் இத்தகைய முறையை அமல்படுத்த தேர்தல் விதிகளில் மாற்றங்களும், கூடுதல் நிதிச்சுமையும் தேவைப்படும் எனக் குறிப்பிட்டது. இருப்பினும் தேர்தல் நேர்மையை உறுதி செய்வது முக்கியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், உடனடியாக நடைபெற உள்ள மாநில தேர்தல்களில் இந்த முறையை செயல்படுத்த இயலாது என்றும், எதிர்கால நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் இதை அமல்படுத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனுடன், வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Source link