திமுக அமைச்சரும் துறைமுகம் தொகுதி வேட்பாளருமான சேகர்பாபுவின் மகன்கள் நடத்தும் தனியார் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானவரித்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு ‘தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா” நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்து அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபுவின் மகன்கள் விக்னேஷ், ஜெயசிம்மன் ஆக இருவரும் மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சாலையில் தனியார் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இன்று காலை 10 மணி அளவில் திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
சிஎம்டிஏ தொடர்பான பிசினஸ்
சேகர்பாபுவின் இரு மகன்களும் சிஎம்டிஏ தொடர்பான அரசு ஒப்பந்தங்களை எடுத்து நடத்தி வருகின்றனர். இதைப் போலவே திருச்செந்தூர் கோவில் நிர்வாகியாக இருந்த அவர் ஒருவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களோடு சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி வரக்கூடிய அருள்முருகன் என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு தொழிலதிபர் பிரேம்குமார் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் அரசு ஒப்பந்தங்களை ஏற்று வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் அடையார், வடபழனி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தேர்தலையொட்டி பண பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தது. அடுத்து சென்னையில் ஐந்து இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக மீது ஊழல் புகார்கள் மலிந்து உள்ள சூழலில் திமுகவில் முக்கிய அமைச்சராக விளங்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபுவின் மகன்கள் தேர்தல் சமயத்தில் காணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
டிரோன் மூலம் கண்காணிப்பு!
ஏற்கனவே தேர்தல் ஆணையம் 120 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.75 கோடி மதிப்பிலான போதை பொருட்கள், ரூ.295 கோடி மதிப்பிலான தங்கம் வெள்ளிப் பொருட்கள், 227 இலவச பரிசுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து இருக்கிறது.
தமிழகத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுப்பதற்காக டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
