விஜயின் தருமபுரி ரோடு ஷோ நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் மாற்றுத் தேதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனுமதி மறுப்பால் பின்னடைவு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களம் காண்கிறது. தனது கட்சியின் விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் மாநிலம் முழுவதும் விஜய் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாளை தருமபுரியில் பிரம்மாண்ட ரோடுஷோ நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களைக் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த ரோடுஷோ ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தவெக தரப்பு தெரிவித்துள்ளது.
புதிய தேதிகள் அறிவிப்பு
நாளை நடைபெறவிருந்த நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், மீண்டும் ஏப்ரல் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தருமபுரியில் ரோடுஷோ நடத்த அனுமதி கோரி தவெக சார்பில் புதிய விண்ணப்பம் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 21-ம் தேதியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது என்பதால், இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக்கத் தவெக திட்டமிட்டுள்ளது.
தொடரும் சிக்கல்கள்
ஏற்கனவே சென்னை வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் விஜய்யின் பிரச்சாரத்திற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படாததால் அங்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் பெரம்பூர் மற்றும் கடலூரிலும் அனுமதி தொடர்பான சிக்கல்களால் பிரச்சாரங்கள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது தருமபுரியிலும் அனுமதி மறுப்புப் படலம் நீடிப்பதால், ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவதாகத் தவெக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தருமபுரியில் புதிய தேதிகளுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அங்கு விஜய்யின் வருகைக்காகத் தொண்டர்கள் மிகப்பெரிய அளவில் காத்திருக்கின்றனர்
