சசிகலாவுடன் கூட்டணி
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அன்புமணி தரப்பு பாமக, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதனிடையில் பாமகவின் நிறுவனர் ராமதாஸ், சசிகலாவின் அஇபுதமமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளார். இதற்காக வேட்பாளர்களை அறிவித்து பரப்புரைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்றைய பிரச்சாரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அன்புமணி எனது குடும்பமே கிடையாது
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அவர் தன்னுடைய மகன், மருமகளை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அன்புமணி மீதுள்ள பாசம் எல்லாம் எப்போதோ போய் விட்டது என்று தெரிவித்துள்ளவர் மகனும், மருமகள் சவுமியாவும் தன்னுடைய குடும்பமே இல்லையென தெரிவித்துள்ளார். அதோடு அன்புமணியை நான் தேர்தலில் நிற்க வைத்தது பெரும் தவறு.
சவுமியா தேர்தலில் தோற்பது உறுதி
அந்த தவறுக்கான வினையை தான் தற்போது அனுபவித்து வருகிறேன். இந்த தேர்தலில் சவுமியா அன்புமணியால் ஜெயிக்கவே முடியாது. குடும்பமே பரப்புரை செய்தாலும் அவர் ஜெயிப்பதற்கு வாய்ப்பில்லை. என்னிடம் சவால் விட்டவர்கள் ஜெயிச்சதே கிடையாது. இவ்வாறு அன்புமணி மற்றும் சவுமியா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் ராமதாஸ். சமீபத்தில் தேர்தலில் போட்டியிடும் சௌமியாவுக்காக அவருடைய மகள்கள் பரப்புரையில் ஈடுபட்டனர்.
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி
தன்னுடைய அம்மாவுக்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் குடும்பமே சேர்ந்து பரப்புரை செய்தாலும் சவுமியாவால் ஜெயிக்க முடியாது என சவால் விடுத்துள்ளார் ராமதாஸ். முன்னதாக நேற்றைய தினம் சேலம் மேற்கு தொகுதியில் வேட்பாளர் அருளை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் ராமதாஸ். பிரச்சாரம் முடிந்து கிளம்பும்போது தலைசுற்றல் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரிப்பு
இதனால் அங்கிருந்தவர்கள் பதறிப்போய் ராமதாஸை அருகிலிருந்த மருவத்துமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் ராமதாஸ் மீண்டும் பரப்புரையில் ஈடுபடுவார் எனவும் அவருடைய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
தருமபுரி தொகுதியில் போட்டி
இந்நிலையில் தற்போது அன்புமணி, சௌமியா இருவரும் தனது குடும்பமே இல்லையென அவர் பேசியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது. இதனிடையில் அன்புமணி ராஜ்ய சபா எம்பியாகியுள்ள நிலையில், அவருடைய மனைவி சவுமியா தருமபுரி தொகுதியில் போட்டியிடவுள்ளார். அவருக்கு எதிராக அங்கு ராமதாஸ் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
