இரானில் கடற்படை முற்றுகை அமெரிக்காவை இன்னும் ஆபத்தில் தள்ளும் ஏன்?

படக்குறிப்பு, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் படகு (கோப்புப்படம்)

இரான் துறைமுகங்களை முற்றுகையிடுவது என்பது, அமெரிக்கா இதற்கு முன்பு இருந்ததை விட சட்ட ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் இன்னும் அபாயகரமான பகுதிக்குள் நுழைவதைக் குறிக்கிறது.

அமெரிக்காவில் இதை செய்ய முடியும், ஆனால் அதில் சில ஆபத்துகள் உள்ளன.

அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல்கள் பந்தர் அப்பாஸ் அல்லது ஜாஸ்க் போன்ற துறைமுகச் சுவர்களுக்கு வெளியே சுற்றித் திரியாது.

அப்படிச் செய்வது டிரோன், ஏவுகணை அல்லது “காமிகாஸி” அதிவேகப் படகுகள் மூலம் உடனடித் தாக்குதலைத் தூண்டுவதாக அமையும்.

அதற்குப் பதிலாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சென்ட்காம், எந்தக் கப்பல்கள் இரானிய துறைமுகங்களில் இருந்து வெளியேறியுள்ளன மற்றும் அவை யாருக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிய செயற்கைக்கோள் மற்றும் பிற உளவுத் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும்.

இந்தக் கப்பல்களின் ஏஐஎஸ் (AIS – தானியங்கி அடையாள அமைப்பு) டிரான்ஸ்பாண்டர்கள் அணைக்கப்பட்டிருந்தாலும், கடற்கரையிலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாப்பான தூரத்தில் பயணிக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள், அவை ஓமன் வளைகுடாவுக்குள் வரும்போது அவற்றைக் கண்டுபிடிப்பதிலும், தடுப்பதிலும் எந்த சிரமமும் இருக்காது.

ஆனால், இரான் இந்த அச்சுறுத்தலை சட்டவிரோத செயல் என்று அழைத்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை தடுத்ததற்கு இரான் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டை இப்போது அது அமெரிக்கா மீது சுமத்துகிறது.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…படக்குறிப்பு, (கோப்புப்படம்)

இதற்குப் பதிலடியாக அண்டை நாடுகளின் வளைகுடா அரபுத் துறைமுகங்களுக்கு எதிராகச் செயல்படப்போவதாக இஸ்லாமியக் குடியரசு அச்சுறுத்தியுள்ளது.

அடுத்ததாக, இரானின் கூட்டாளிகளான சீனா மற்றும் ரஷ்யா குறித்த கேள்வி எழுகிறது.

உதாரணமாக, சீனாவுக்குச் சொந்தமான ஒரு கப்பலையோ அல்லது சரக்கையோ சோதனையிடவும், பறிமுதல் செய்யவும் அமெரிக்கா தயாராக இருக்குமா?

மேலும், வெகு தொலைவில் இல்லாத ஜிபூட்டியில் ராணுவத் தளத்தைக் கொண்டுள்ள சீனா, தனது கப்பல்களுக்கு ஆயுதம் ஏந்திய கடற்படை பாதுகாப்பை வழங்க முடிவு செய்தால் என்ன நடக்கும்? போன்ற கேள்விகள் உள்ளன.

படக்குறிப்பு, ஏப்ரல் 12 அன்று எடுக்கப்பட்ட ஹோர்மூஸ் நீரிணையில் ஒரு கப்பல்

ராஜீய விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கலாம்

டொனால்ட் டிரம்ப் விடுத்த அசல் அச்சுறுத்தல்களிலும் மற்றும் அவரது ராணுவத் தளபதிகளின் விளக்கங்களிலும் ஆராய்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.

“ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழைய அல்லது வெளியேற முயற்சிக்கும் அனைத்து கப்பல்களையும் முற்றுகையிடுவோம்” என்ற அவரது முதல் முன்மொழிவு, இப்போது இரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களை மட்டுமே குறிப்பதாகத் தெரிகிறது. ஆனால் இது கூட பல சிக்கல்களும் அபாயங்களும் நிறைந்தது.

இரான் நாட்டுக்கொடி ஏந்திய கப்பல்களை நிறுத்துவது ஒரு விஷயம், ஆனால் இந்திய அல்லது பாகிஸ்தான் கொடி ஏந்திய ஒரு எண்ணெய்க் கப்பலின் நிலை என்ன? இதுவரை நீரிணையை கடந்து செல்ல முடிந்த கப்பல்களில் சீனக் கப்பல்கள் கணிசமான விகிதத்தில் உள்ளன.

ஒரு கப்பலுக்குள் நுழைந்து சோதனையிடுவது என்பது ஒரு போர் நடவடிக்கையாகும். மேலும் இது நிச்சயமாக ஒரு ஆழமான விரோதச் செயலாகும். இதன் ராஜீய பாதிப்புகள் மிகப்பெரியதாக இருக்கலாம்.

இது தென் சீனக் கடலில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும், அங்கு தைவான் மீதான சீனாவின் லட்சியங்கள் எப்போதும் உள்ளன.

ஹோர்மூஸ் நீரிணையில் இரானுக்கு “சட்டவிரோதமான சுங்கக் கட்டணத்தைச் செலுத்தும் எவருக்கும் திறந்த கடலில் பாதுகாப்பான பயணம் இருக்காது” என்றும் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

பாதுகாப்பான பயணத்திற்காக சுமார் 2 மில்லியன் டாலர் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பரவலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது – இது இரானுக்கு ஒரு முக்கியமான வருமான ஆதாரமாகும்.

ஆனால் இது யாராலும் கண்டறிய முடியாத கிரிப்டோகரன்சி மூலம் செலுத்தப்படலாம். பாதுகாப்பான பயணத்திற்கு சுங்கம் செலுத்தியவர்களையும், அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் அதைப் பெற்றவர்களையும் எப்படி பிரிப்பது?

மொத்தத்தில், இது பதற்றத்தைத் தணிப்பதற்குப் பதிலாக அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகத் தோன்றுகிறது.

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

இரான் மீது அழுத்தம் கொடுக்க சீனாவை தூண்டலாம்

டொனால்ட் டிரம்ப் விடுத்த முற்றுகை அச்சுறுத்தல் சந்தைகளில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன, ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்துள்ளன மற்றும் ஐரோப்பிய சந்தை ஃப்யூச்சர்ஸ் குறைவான தொடக்கத்தையே காட்டுகின்றன.

ஆனால் இங்குள்ள பரந்த நோக்கம், சீனா மீது அதிக அழுத்தத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியாகத் தெரிகிறது.

சீனாவிடம் பெரிய எண்ணெய் இருப்புக்கள் இருந்தாலும் மற்றும் ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெயைப் பெற்றாலும், சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 16 சதவீதத்தை இரான் வழங்கியது.

ஹோர்மூஸ் நீரிணை வழியாக சென்ற இரானிய எண்ணெயில் பெரும்பகுதி சீனாவிற்குச் சென்றது. அதைத் தடுப்பது, ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரான் மீது அதிக அழுத்தம் கொடுக்க சீனாவை கட்டாயப்படுத்தலாம்.

படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link