ஹைதராபாத்,
ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் கடந்த 10-ம் தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகத்தை சோதனை செய்தபோது மது போதையில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து காரில் சோதனை செய்தபோது, ஓட்டுநர் இருக்கை அருகிலிருந்த ஒரு பொத்தானை காவலர் ஒருவர் தவறுதலாக அழுத்தினார். அப்போது வாகனத்தின் பதிவு எண் மாற்றமடைந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து காரில் டெல்லி மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களின் பதிவு எண்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் அவர் ஒரு மருத்துவர் என்றும் காரை டெல்லியில் வாங்கியதும் தெரியவந்தது. மேலும் பதிவு எண்ணை மாற்றாமல் வைத்திருந்ததுடன் ‘ப்ளிப் நம்பர் பிளேட் சிஸ்டம்’ என்ற கருவியை ஆன்லைனில் வாங்கி நகரில் உள்ள தொழில்நுட்ப நிபுணர் மூலம் காரில் பொருத்தியிருந்ததும் தெரியவந்தது. மேலும் அதே மாடல் காரை அவரது உறவினர் ஒருவர் தெலுங்கானா பதிவு எண்ணுடன் பயன்படுத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சாலை வரி தவிர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் பேரிலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழும் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்தனர்.
