காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்த நேரத்திலேயே அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 30 மாதங்கள் கடந்த பிறகே திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை. மேலும், நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாகவும் எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்த சூழலில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சட்டம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்துவது சாத்தியமில்லை. தற்போது பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்த பிறகு, ஏப்ரல் 29ஆம் தேதி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். மகளிருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டிருப்பது அரசியல் ஆதாயம் நோக்கமாக கொண்ட முயற்சியாகும். இவ்வாறு கார்கே குறிப்பிட்டுள்ளார்.
