திருப்பூர்,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவிநாசி தொகுதியில் அதிமுக கூட்டணியில், பாஜக சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் இன்று சேவூர் சந்தை பகுதியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி மக்களுடன் நெருக்கமாக கலந்துரையாடிய எல்.முருகன், சேவூர் சந்தையில் பணியாரம் சுட்டு வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் இதனை உற்சாகத்துடன் வரவேற்று, பெரும் ஆதரவை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, அவிநாசி தொகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மந்திரி எல்.முருகன் விளக்கமளித்தார். மேலும், “அவிநாசியின் முன்னேற்றத்திற்காக தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
