லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மணீஷ் குமார் (வயது 35) விவசாயியான இருவருக்கு திருமணமாகி மனைவியும், ஹனி (வயது 8), பியான்ஷி (வயது 5) ஆகிய மகள்களும், பிரதீக் (வயது 3) என்ற மகனும் இருந்தனர்.
இந்நிலையில், மணீஷ் குமாரின் வீடு இன்று காலை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மணீஷ் குமாரின் சகோதரன் அண்டை வீட்டாருடன் சேர்ந்து மணீஷ் குமார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அங்கு படுக்கை அறையில் மணீஷ் அவரது மனைவி , 3 குழந்தைகள் அனைவரும் சடலமாக கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணீஷின் சகோதரர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தைகள் 3 பேரையும் கொலை செய்துவிட்டு மணீசும் அவரது மனைவியும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. தற்கொலைக்குமுன் மணீஷ் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
