மும்பை,
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தை தங்களது ஹோம் கிரவுண்டாக பயன்படுத்த அனுமதி கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கு மும்பை இந்தியன்ஸ் (MI) அணி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மும்பையில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டு இருப்பதால், அதே நகரில் மற்றொரு அணியும் ஹோம் கிரவுண்டு வைத்திருப்பது ‘சொந்த மண்’ என்ற தனித்துவத்தை பாதிக்கும் என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, மும்பை மைதானம் கிடைக்காத சூழலில், பெங்களூரு அணி மாற்று வாய்ப்பாக இந்தூர் மைதானத்தை ஹோம் கிரவுண்டாக தேர்வு செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இரு அணிகளும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் இந்த தகவல் ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
