திடீர் தொழில்நுட்ப கோளாறு.. பள்ளி மைதானத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

முன்னதாக தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த பயிற்சி ஹெலிகாப்டர் மராட்டிய மாநிலம் மும்பையின் ஜூகுவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு பறந்து கொண்டிருந்தது. ஹெலிகாப்டரில் விமானி பயிற்சி விமானி மற்றும் தொழில்நுட்ப என்ஜினீயர் உள்பட 4 பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டர் நடு வானில் பறந்து கொண்டு இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்தது. இதை கவனித்த விமானி பால்கர் மாவட்டத்தில் உள்ள வித்யா வைபவ் உயர்நிலைப்பள்ளி மைதான திறந்தவெளியில் அவசரமாக தரையிறக்கினார்.

விமான என்ஜினீயர் தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்து சரிசெய்தார். பின்னர் சுமார் 40 நிமிடங்கள் கழித்து பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் ஜூகுவுக்கு திரும்பியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மைதானத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டு இருந்தது.

Source link