தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கையான மாநிலம் தமிழ்நாடு – மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை,

சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;

திராவிட மாடல் என்பது வளர்ச்சிக்கான மாடல், ரிசல்ட் கொடுக்கக் கூடிய மாடல், மக்களுக்கு நன்மை கொடுக்கக் கூடிய மாடல். இதையெல்லாம் உலகிற்கு எடுத்துச் செல்லக் கூடிய மாநாடுதான், இந்த செயலாக்க மாநாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்கு, எங்களின் செயலின் மூலம் பதில் சொல்லும் மாநாடுதான் இந்த செயலாக்க மாநாடு. தொழில்துறை அமைச்சர் இங்கு சொன்ன ஒவ்வொரு டேட்டாவும் எங்களை விமர்சித்தவர்களுக்கான பதில். அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்கள் அணி கடந்த 5 ஆண்டாக செய்த உழைப்புக்கான நம்பர்.

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒப்பந்தம் போட்ட குறுகிய காலத்திலேயே தொழில் நிறுவனங்கள் எப்படி செயல்பாட்டுக்கு வருகிறது என பலரும் கேட்கின்றனர். ஒரு நிறுவனம் தொழில் தொடங்க ஏதுவான சூழல் தமிழகத்தில் உள்ளது. ஒருங்கிணைத்து பணிகளைச் செயல்படுத்தக் கூடிய அணி, மனித வளம், நிலம் என அனைத்து அம்சங்களும் இங்கே இருக்கின்றன.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் 2 டைடல் பார்க்குகள் மட்டுமே இருந்தன. கடந்த 5 வருடத்தில் 7 டைடல் பார்க்குகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 2ம் நிலை நகரங்களில் கூட மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. 35 மாவட்டங்களில் தொழில்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரானிக் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 41 சதவீதமாக உள்ளது.

காழ்ப்புணர்ச்சி செய்யாமல் மாநில நலனை முன்னிறுத்தி அரசியல் செய்கிறோம். எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. முந்தைய ஆட்சியின் திட்டங்கள், ஒப்பந்தங்களையும் செயல்படுத்துகிறோம். தொழில்துறையில் நாங்கள் செய்துள்ள சாதனையை நாங்களே முறியடிக்க அடுத்து வரப்போகிறோம்.

உங்களின் வளர்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி. புதிய திட்டம் தொடங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தமிழகத்தில்தான் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வர வேண்டும். 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதே எங்கள் இலக்கு. இணைந்து செயல்படுவோம். வெல்வோம் ஒன்றாக.”

இவ்வாறு அவர் பேசினார்.

Source link