மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி, நெல்லையில் தொழிற்சங்கங்கள் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து ஏழு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு ஏழு முக்கிய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு எல்.பி.எப். தொழிற்சங்க தலைவர் சுசிரவீந்திரன் தலைமை வகித்தார்.

இந்த மறியல் போராட்டத்தில் எல்.பி.எப். மாவட்டச் செயலாளர் கருப்பசாமி, சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் ரசல், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத், எச்.எம்.எஸ். மாநில செயலாளர் ராஜலட்சுமி, மாவட்டத் தலைவர் ராஜ்குமார், ஏ.ஐ.டி.யு.சி. பொருளாளர் பாலசிங்கம், யூ.டி.யு.சி. மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் ராஜகோபால், ஐக்கிய விவசாய முன்னணி சங்க பிரதிநிதி ராகவன் உட்பட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ஐயர் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து திமுக உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்துக்கு திமுக தொழிற்சங்க மாவட்ட தலைவர் தர்மர், சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். வண்ணாரப்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 400 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Source link