வங்காள தேசத்தில் பொதுத்தேர்தல்: விறு விறு வாக்குப்பதிவு

டாக்கா,

வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்களின் தீவிர போராட்டத்தால் 2024-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையில் வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 350 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 300 இடங்களுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறு விறுப்புடன் நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதாசார முறையில் தேர்வு செய்யப்படும். இத்தேர்தலில் போட்டியிட மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைய உள்ளது. பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி தற்போது வரை 33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுகள் முடிவடைந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வங்காளதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் வாக்களித்தேன். எல்லாம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது, எல்லாம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது… பெண்கள் சுதந்திரமாக வாக்களிக்கிறார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, முறையான தேர்தல் நடைபெற்று வருகின்றன. முடிவு சரியாக இருக்கும் என்றும், பாராளுமன்றம் கூடும் என்று நம்புகிறேன். இத்தனை ஆண்டுகளாக நாம் பார்த்தது, இப்போது எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் பிஎன்பி மந்திரி சர்வாரி ரஹ்மான் கூறியுள்ளார்.

Source link