தமிழக அரசு அறிவித்த திரைப்பட விருதை விமர்சித்த இயக்குநர் கோபி நயினார்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று கூறி போராடியவர் கோபி நயினார். அதன் பிறகு ‘அறம்’ படம் மூலம் கவனம் ஈர்த்தார். முதல் படமே அட்டகாசமாக இருந்ததால் கோபி நயினார் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார். நடிகை ஆண்ட்ரியாவை வைத்து ‘மனுசி’ படத்தை இயக்கியிருக்கிறார்.

2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிச் சிறப்பிக்கிறார்.

மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் கோபி நயினார், திரைப்பட விருது தொடர்பாக தமிழக அரசை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குனருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டிருப்பேன்! உலகம் முழுவதும் முதலாளித்துவத்தை பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாக பிரிக்கும். உரிமை கோருபவர்களை தன் அரசுக்கு எதிரானவர்களாகவும், தன்னிடம் சமரசமாகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்து, போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

கோபி நயினார் இயக்கிய ‘அறம்’ படம் தமிழக அரசின் திரைப்பட விருதில் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link