பீர் பாட்டிலில் விஜய் ஸ்டிக்கர்.. யார் அந்த தவெக வேட்பாளர்? உறைந்துபோன தவெகவினர்! – vote collection by pasting sticker of periyakulam tvk candidate with vijay face on beer bottle

பீர் பாட்டிலில் தவெக வேட்பாளர் சபரி ஐயங்கரன், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆகியோர் புகைப்படத்துடன், ‘விசில் சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள்’ என்ற வாக்கியத்துடன் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை புதிதாக தேர்தல் களத்தில் குதித்து உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, தொகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பெரியகுளம் தவெக வேட்பாளர்

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சபரி ஐயங்கரன் போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதிக்குள் பல்வேறு பகுதிகளில் நேரடியாக மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், சமூக வலைதளங்களில் பரவி வரும் சில புகைப்படங்கள் அந்தக் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீர் பாட்டிலில் விஜய் ஸ்டிக்கர்

அந்த புகைப்படங்களில் பீர் பாட்டில்களின் மீது சபரி ஐயங்கரன் மற்றும் அந்த கட்சித் தலைவர் விஜய் ஆகியோரின் படங்களுடன், “விசில் சின்னத்திற்கு வாக்களிக்கவும்” என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த படங்கள் வேகமாக பரவி வைரலாகி வருவதால், அது கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்த விவகாரம் குறித்து பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்து உள்ளனர். அந்த புகாரில், சமூக வலைதளங்களில் இத்தகைய புகைப்படங்களை பகிர்ந்து அவதூறு பரப்பும் மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

உறைந்துபோன தவெகவினர்

மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி தங்களது வேட்பாளரை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டு இப்படியான செயல்களில் யாரோ ஈடுபட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படியான சர்ச்சைகள் உருவாகுவது தேர்தல் சூழலை மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக புதிதாக களமிறங்கி உள்ள கட்சிக்கு இது ஒரு சவாலாக மாறி உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

யார் அந்த தவெக வேட்பாளர்?

இந்த புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் இந்த புகைப்படங்களின் உண்மை தன்மை என்ன, யார் இதற்கு காரணம், பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்கான பதில்களை கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம், தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது.