பரபரக்கும் அரசியல் களம்: அமைச்சர்கள் தொகுதிகளை குறிவைக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள்

சென்னை,

தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடந்த முறையை விட கூடுதல் இடங்கள் கேட்டு குடைச்சல் கொடுத்து வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை வருகிற 22-ந்தேதி தொடங்க உள்ளது.

இந்த நிலையில் திருச்சியில் தி.மு.க. அமைச்சர்கள் போட்டியிட்டு வென்ற திருச்சி மேற்கு, திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளை குறி வைத்து அங்கு தங்களது கட்சி போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

திருச்சி மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதி களில் ஒன்றை இந்த முறை தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என் றும், இதில் ஒன்றில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புறநகர் மாவட்ட குழு கூட்டத்தில் திருவெறும்பூர், மணப்பாறை தொகுதிகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மாநில குழுவுக்கு அனுப்பி உள்ளனர்.

இதில் திருச்சி மேற்கு தொகுதி, தி.மு.க. முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தொகுதியாகும். அவர் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டார். அதேபோன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் திரு வெறும்பூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரும் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் இரண்டு கம்யூனிஸ்டுகளும் அமைச்சர்கள் வென்ற தொகுதிகளை குறிவைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது திருச்சி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கம்யூனிஸ்டு நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘நாங்கள் விருப்பம் தெரிவித்துள்ள அமைச்சர்களின் தொகுதிகள் இரண்டிலும் ஏற்கனவே எங்கள் கட்சிகளின் தலைவர்கள் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

அந்த இரண்டு தொகுதிகளிலுமே கிளை அமைப்பு வரை எங்களது கட்சி வலுவாக உள்ளது. அரசியலில் எதுவும் சாத்தியம்தான். நாங்கள் வலிமையாக உள்ள, வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் என்று குறிப்பிட்டு திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூரை கேட்டுள்ளோம். அமைச்சர்கள் தொகுதிகள் என்பதால் கேட்கவில்லை. என்றனர்.

Source link